தலைநகர் சென்னையில் கரோனா தொற்று அதிகரித்து வரும் சூழ்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று சென்னை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள அம்மா மாளிகையில், ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இதில், சென்னை மாநகரில் கரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள், மாநகர் முழுவதும் தெருவாரியாக கிருமி நாசினிகள் தெளிப்பு, தூய்மைப் பணியாளர்களுக்கு செய்யப்பட்டுள்ள நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் அப்போது முதலமைச்சர் கேட்டறிந்தார்.
இந்தக் கூட்டத்தில், அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, டி. ஜெயக்குமார், சி. விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் க. சண்முகம், காவல்துறை தலைமை இயக்குநர் திரிபாதி, வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், சென்னை காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மாநகராட்சி அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்த புகைப்படக் கண்காட்சியினை பார்வையிட்டார். நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனநல ஆலோசனைகள் வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையின் செயல்பாட்டினையும் அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதையும் படிங்க: சென்னையில் டாஸ்மாக் திறக்கப்படாது - தமிழ்நாடு அரசு!