புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி இன்று (ஜன.23) சட்டப்பேரவை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், "அண்டை மாநில தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ படிப்பில் 50 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கி வருகின்றனர்.
ஆனால், புதுச்சேரி மாணவர்களுக்கு 25 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கியுள்ள நிலையில் புதுச்சேரியில்கூட இடம் கிடைக்க முடியாமல் அவதிக்குள்ளாகிறார்கள். இதற்கு மத்திய அரசும், கிரண்பேடியும்தான் பொறுப்பேற்க வேண்டும். புதுச்சேரி மாநிலத்தில் மருத்துவ படிப்பில் 10 விழுக்காடு உள் ஒதுக்கீடு கொடுக்க முடியாத சூழ்நிலையை உருவாக்கி மத்திய அரசும் கிரண்பேடியும் திட்டமிட்டு அரசு பள்ளி மாணவர்களுக்கு துரோகம் செய்துள்ளனர்.
மேலும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி செயல்பாடுகள் குறித்து குடியரசுத் தலைவரிடம் நேரம் கேட்டுக் இருந்த நிலையில் குடியரசு தின விழா ஏற்பாடுகள் உள்ளதால் பிப்ரவரி மாதம் நேரம் ஒதுக்கித் தருவதாக குடியரசுத் தலைவர் அலுவலகம் சார்பில் தகவல் தெரிவித்துள்ளனர். புதுச்சேரி மின் துறை தனியார் மயமாக்கப்படுவதை நிறுத்தி வைக்க வேண்டும்.
மத்திய அரசு இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி மீனவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நமது கடல் எல்லை பகுதியில் இலங்கை கடற்படையினர் அத்துமீறி நுழைந்து மீனவர்களை கைது செய்து செல்கின்றனர். இதனை உடனடியாக மத்திய அரசும் பிரதமர் மோடியும் தடுத்து நிறுத்த வேண்டும்.
தற்போது பெட்ரோல் விலை உயர்வால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். கச்சா எண்ணெய் விலை குறைவாக உள்ளதால் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுச்சேரி பாஜகவில் இணைந்த பெண் தாதாவையும், அவருடன் இருப்பவர்களையும் கைது செய்து சிறையில் அடைக்க காவல் துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளேன்.
டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு பிரதமர் மோடி செவிசாய்த்து மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: கிரண்பேடியை திரும்பப் பெறக்கோரிய தர்ணா போராட்டம் முடிவுக்கு வந்தது