சென்னை: நம் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் என, முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வாழ்த்துமடல் ஒன்றை எழுதியுள்ளார்.
அந்த மடலில் முதலமைச்சர் கூறியதாவது, “ஓய்வறியாச் சூரியனாம் நம் முத்தமிழறிஞர் கலைஞரின் ஓய்விடத்தில் எடுத்துக் கொண்ட சூளுரையின்படி, தமிழ்நாட்டில் மீண்டும் திமுக ஆட்சி அமைந்து, ஒரு மாதகாலம் கடந்திருக்கிறது.
உங்களைப் போன்ற உடன்பிறப்புகளின் கடும் உழைப்பாலும், தமிழ்நாட்டு மக்களின் பேராதரவாலும், தோழமைக் கட்சியினரின் ஒத்துழைப்பாலும் தனிப்பெரும்பான்மை பலத்துடன் கிடைத்த இந்த வெற்றியை, மே 2-ஆம் நாள் இரவில் பேரறிஞர் பெருந்தகை அண்ணா நினைவிடத்திலும், நம் உயிர்நிகர்த் தலைவர் கலைஞர் ஓய்விடத்திலும் காணிக்கையாக்கி நன்றி செலுத்தினேன்.
அங்கே செய்தியாளர்களைச் சந்தித்தபோது, 'எங்களுக்கு வாக்களித்தவர்கள், ‘இவர்களுக்கு நாம் வாக்களித்தது நன்மைதான் - மகிழ்ச்சிதான்’ என்று உணரக்கூடிய வகையிலும், வாக்களிக்காதவர்கள், ‘இவர்களுக்கு நாம் வாக்களிக்காமல் போய்விட்டோமே’ என்று எண்ணக்கூடிய அளவுக்கும் நிச்சயமாக எங்களுடைய பணி அமையும் என்ற உறுதியினை, உத்தரவாதத்தினை வழங்கினேன்'.
பொறுப்பேற்பதற்கு முன்பே கரோனா தொற்று பேரிடர் நிலையை உணர்ந்து, பாரபட்சமற்ற அணுகுமுறையுடன் மக்களின் உயிர் காக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
மே 7ஆம் தேதி முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்ட முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆகிய நானும், அமைச்சரவையில் உள்ள அனைவரும் அலுவலர்களின் ஒத்துழைப்புடன் 24 மணி நேரமும் மக்கள் நலனையே முதன்மையாகக் கொண்டு செயலாற்றியதன் விளைவாக, நோய்த்தொற்றுச் சங்கிலியை உடைக்கும் முயற்சிக்கு ஓரளவு நல்ல பலன் கிடைத்திருக்கிறது.
பத்தாண்டு கால இருட்டிலிருந்து மீண்டு, உதயசூரியனாம் ஞாயிறு வெளிச்சத்தில் தமிழ்நாடு ஒரு திங்கள் காலத்தைக் கடந்திருக்கும் நிலையில், அனைத்துத் தரப்பிலிருந்தும் திமுக அரசுக்கு வாழ்த்துகள் வந்தவண்ணம் உள்ளன.
ஊடகங்கள் உண்மை நிலையை உரைக்கின்றன. கட்சி எல்லைகளைக் கடந்து திமுக அரசு பாராட்டுகளைப் பெற்றுள்ளது. பல்வேறு துறையினரும் ஆதரவளிக்கின்றனர். பொதுமக்கள் தங்களின் நம்பிக்கை வீண் போகவில்லை என்ற நிம்மதி அடைந்துள்ளனர்.
ஆட்சியின் மீது அங்கொன்றும், இங்கொன்றுமாக வெளிப்படும் சிறுசிறு விமர்சனங்களைக்கூட புறக்கணிக்காமலும், மாற்று ஆலோசனைகளைக் கவனத்தில் கொண்டும், மக்களின் நலன் காக்கும் அரசாகச் செயல்பட்டு வருகிறோம்.
கரோனா தொற்று அதிகமாக இருந்த கோயம்புத்தூர் உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களுக்கு நேரில் சென்று ஆய்வுகள் மேற்கொண்டேன். பாதிப்புக்குள்ளானோருக்கு உரிய முறையில் விரைவான வகையில் சிகிச்சை கிடைத்திடவும், மற்றவர்கள் பாதிப்படையாத வகையில் தடுப்பூசி முகாம்களைக் கூடுதலாக்கியும், எளியோருக்கான உதவிகள் வழங்கியும் அனைத்துத் தரப்பு மக்களின் நலனும் பாதுகாக்கப்பட்டது.
முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்தநாளான ஜூன் 3ஆம் நாள் குடும்ப அட்டைதாரர்களுக்கு 14 மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்கும் திட்டமும், இரண்டாவது கட்ட நிவாரணத் தொகையான ரூ.2000 வழங்கும் திட்டமும் மக்கள் நலன் கருதி தொடங்கி வைக்கப்பட்டது.
மருத்துவத் துறையினர் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களுக்கான நிவாரணம், நலிவடைந்த கலைஞர்களுக்கான நிவாரணத் தொகை என, இந்தப் பேரிடர் காலத்தைக் கருதியும், நடைமுறையில் உள்ள ஊரடங்கால் ஏழை - எளிய மக்களுக்கு ஏற்படும் இடர்பாடுகளைப் போக்கும் வகையிலும், தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
முதலமைச்சர் என்ற முறையில், உங்களில் ஒருவனான என் தலைமையிலான மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவிற்குப் பொருளாதார வல்லுநர் ஜெயரஞ்சனை துணைத் தலைவராகக் கொண்ட குழு அமைக்கப்பட்டு, அந்தக் குழுவில் உள்ள உறுப்பினர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று, அவர்களின் ஆலோசனைகளை முழுமையாகப் பெற்றுச் செயல்படுத்தும் வகையில், அவர்களுக்கான துறைகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
அனைத்துத் தரப்பினரையும் ஒருங்கிணைத்து, அனைத்து மக்களுக்குமான இந்த அரசு தனது பணிகளை ஓய்வின்றி மேற்கொண்டு வருகிறது. காலமறிந்து கூவுகின்ற சேவலாக ஒவ்வொரு செயல்பாடும் தொடர்கிறது.
அந்த வகையில் திருச்சி, தஞ்சாவூர் மாவட்டங்களில் காவிரிப் பாசனப் பகுதிகளில் நடைபெறும் தூர்வாரும் பணிகளைப் பார்வையிடவும், சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையினைத் திறந்து டெல்டா உழவர்களின் தாய்ப்பாலாக விளங்கும் காவிரி நீரைக் குறுவை சாகுபடிக்கு வழங்கிடவும் இரண்டு நாள் பயணத்தை மேற்கொள்கிறேன்.
நாளை (ஜூன் 11) திருச்சிக்குப் பயணித்து, திருச்சி, தஞ்சாவூர் மாவட்டங்களில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறேன். சோழ மன்னன் கரிகாலன் அமைத்த கல்லணையும் அதனைத் தொடர்ந்து சோழ அரசர்கள் பலர் மேற்கொண்ட நீர் மேலாண்மைத் திட்டங்களும் காவிரி பாசனப் பகுதியின் கடைமடை வரை செழிப்புறச் செய்திருந்தன.
அந்த உன்னத நிலையை ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு, நம் உயிர் நிகர் தலைவர் கலைஞர், தனது ஆட்சிக்காலத்தில் மேற்கொண்ட தூர்வாரும் பணிகள் வாயிலாக மீட்டெடுத்தார். அவர் வழியில், காவிரிப் பாசனப் பகுதியில் 4,061 கி.மீ. தூரத்திற்குத் தூர்வாரும் பணிகள் விரைந்து மேற்கொள்ளப்படுகின்றன.
கடைமடை வரை இந்தப் பணிகள் செம்மையாக நடைபெறுவதை உறுதி செய்து, ஜூன் 12-ஆம் நாள் சேலம் மாவட்டத்தில் ஆய்வுப் பணிகள், ஆலோசனைக் கூட்டங்கள், நலத்திட்ட உதவிகளில் பங்கேற்று, அதன்பின் மேட்டூர் அணையிலிருந்து காவிரிப் பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட இருக்கிறேன்.
முறையாகத் தூர்வாரி, ஆறுகள், கால்வாய்கள், வாய்க்கால்களில் புதுப்புனல் பெருக்கெடுத்தோட வழி செய்வதன் வாயிலாக, டெல்டா மாவட்டங்களில் லட்சக்கணக்கான ஹெக்டேர் நிலத்தில் குறுவை சாகுபடி சிறப்பாக அமையும்.
உழவர்களின் வாழ்வாதாரம் மலரும். மக்கள் நலன் காக்கும் மற்றொரு பயணமாக, மேற்குறிப்பிட்ட மாவட்டங்களில் நான் மேற்கொள்ளவிருப்பவை முழுக்க முழுக்க அரசுப் பணிகள் சார்ந்தவை என்பதால், அந்தந்த மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கிளைக்கழக நிர்வாகிகள், செயல்வீரர்கள் உள்ளிட்ட அன்புக்குரிய உடன்பிறப்புகள் என்னை நேரில் சந்திப்பதற்கு ஆர்வம் காட்ட வேண்டாம்.
வரவேற்பு அலங்காரங்கள் போன்ற எதிலும் ஈடுபட வேண்டாம் என, மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். நான் ஏற்கனவே திருச்சியில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததுபோல, கரோனா நோய்த்தொற்று முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டு, மக்களின் உயிர்ப் பாதுகாப்பை உறுதி செய்யும் நாள்தான் மகிழ்ச்சியான நாளாக, வெற்றிகரமான நாளாக அமையும்.
நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக, நாளொன்றுக்கு 35 ஆயிரத்திற்கும் மேல் இருந்த நோய்த்தொற்று எண்ணிக்கை ஏறத்தாழ சரிபாதியாகக் குறைந்து, 17ஆயிரம் என்கிற அளவிற்கு இறங்கி வந்துள்ளது.
எனினும், முழுமையான அளவில் நோய்த்தொற்று சங்கிலியை உடைக்க வேண்டியுள்ளது. அதிலும், நான் பயணம் மேற்கொள்ளவிருக்கும் மூன்று மாவட்டங்களில் தஞ்சாவூரும், சேலமும் நோய்த்தொற்று எண்ணிக்கை சற்று கூடுதலாக உள்ள மாவட்டங்கள்.
எனவே, உடன்பிறப்புகளாகிய நீங்களும் உங்களில் ஒருவனான நானும் ஊரடங்குக் கால நெறிமுறைகளைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டியவர்களாக இருக்கிறோம்.
தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சிப் பொறுப்பேற்று ஒரு மாதம் கடந்தும், இந்த ஆட்சி அமைவதற்கான அயராத உழைப்பை அல்லும் பகலும் வழங்கிய அன்பு உடன்பிறப்புகளைக் காண முடியவில்லையே என்ற ஏக்கம் எனக்குள்ளும் இருக்கிறது.
ஒவ்வொரு பயணத்தின்போதும், உங்கள் ஆர்வத்திற்குத் தடை போடும் அறிவிப்பை வெளியிட வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டிருப்பதும், இதயத்தில் பாரமாக அழுத்துகிறது.
‘கடமை’யை நான் நிறைவேற்ற வேண்டியிருப்பதால், ‘கண்ணிய’மிக்க செயல்பாடு என்பது நீங்கள் ‘கட்டுப்பாடு’ காப்பதுதான். பேரிடர் காலத்தினால் நாம் கட்டுண்டு இருக்கிறோம், பொறுத்திருப்போம், காலம் விரைவில் மாறும், நோய்த் தொற்று இல்லாத தமிழ்நாட்டை உருவாக்கிவிட்டு, உங்கள் அன்பு முகம் காண நேரில் வருவேன்” என்றார்