சென்னை தலைமைச் செயலகத்தில் கரோனாவுக்கு எதிரான, 33 மக்கள் இயக்க விழிப்புணர்வு விளம்பர வாகனங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து இன்று துவக்கி வைத்தார். இந்த வாகனத்தில் நோய்த் தொற்றில் இருந்து மக்கள் தங்களை தற்காத்துக் கொள்ள, புகைப்படங்களுடன் கூடிய விளக்கங்கள் ஒளிபரப்பப்படும்.
தொடர்ந்து, கரோனா தொடர்பான விழிப்புணர்வு குறும்படங்கள் மற்றும் பாடல்கள் அடங்கிய குறுந்தகட்டினை முதலமைச்சர் வெளியிட்டார். இதனை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், செய்தி, விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு ஆகியோர் பெற்றுக்கொண்டனர். அதேபோல் திரைக்கலைஞர்கள் மூலம் உருவாக்கப்பட்டுள்ள கரோனா விழிப்புணர்வு பாடல்களை ஒளிபரப்பு செய்யும் எல்.இ.டி விளம்பர வாகனத்தையும், கரோனா தொற்று தொடர்பான விழிப்புணர்வு கையெடுகளையும் முதலமைச்சர் பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் ஜெயக்குமார், மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: 'மீனவர்களுக்கு நீதி கிடைக்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்' - துணை முதலமைச்சர்