அக்டோபர் 31ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிய உள்ள நிலையில், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்தும், கரோனா தடுப்பு குறித்தும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அக்.28ஆம் தேதி மருத்துவ நிபுணர்கள் குழுவுடனும், மாவட்ட ஆட்சியர்களுடனும் ஆலோசனை நடத்தவுள்ளார். தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இக்கூட்டம் நடைபெறகிறது.
தமிழ்நாட்டில் தற்போது பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள், தவிர மற்ற அனைத்தும் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஒவ்வொரு மாத இறுதியிலும் அடுத்தக்கட்ட பொது முடக்கத்தை அறிவிக்கும் முன்பு, மருத்துவ நிபுணர்கள் குழுவுடனும், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும் முதலமைச்சர் ஆலோசனை நடத்தி வருகிறார். அதன்படி, இக்கூட்டத்தில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தியேட்டர்கள் திறக்கப்படுமா?
குறிப்பாக, திரையரங்கங்கள் திறப்பு குறித்து அன்றைய கூட்ட முடிவில் அறிவிக்கப்படும் என நம்பப்படுகிறது. அதோடு, நவம்பர் மாதம் விழாக்காலம் என்பதால் ஊரடங்கு தளர்வுகள் குறித்தும், மழைக்காலம் என்பதால் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் அறிவிப்புகள் வெளியாகலாம் எனக் கூறப்படுகிறது. மேலும், புறநகர் மின்சார ரயில் சேவையை தொடங்க மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் பழனிசாமி நேற்று கடிதம் எழுதியுள்ள நிலையில், அது குறித்தும் மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் விவாதிக்கப்படும் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: 7,879 பேருக்கு வேலைவாய்ப்பை தரும் தொழில் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர்!