சென்னை: சென்னை மாமல்லபுரத்தில் நாளை 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் தொடங்கப்பட உள்ளன. இந்த போட்டியில் 187 நாடுகளைச் சேர்ந்த இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். இந்த போட்டியை காண எராளமான சுற்றுலாப் பயணிகள் வரவிருப்பதால், அவர்களுக்கு தங்குமிடம், போக்குவரத்து உள்ளிட்ட வசதிகள் தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அதன் ஒரு பகுதியாக செஸ் வீரர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் சுற்றுலாத் தலங்களை எளிதில் சுற்றிப்பார்க்கும் வகையில் சுற்றுலாத் துறையால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சுற்றுலா நட்பு வாகனங்களை சுற்றுலா வளர்ச்சித் துறை அமைச்சர் மதிவேந்தன் தொடங்கி வைத்தார். குறிப்பாக 25 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, சுற்றுலா நட்பு வாகன சவாரி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆட்டோக்கள் மூலம் மலிவான விலையில் மாமல்லபுரத்தில் சவாரி மேற்கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் பின் சோழமண்டல ஆர்டிஸ்ட் வில்லேஜ் - மாமல்லபுரம் இடையேயான 5 இலவச பேருந்து சேவையை அமைச்சர் மதிவேந்தன் தொடங்கி வைத்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மதிவேந்தன், "44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியையொட்டி தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சித் துறை மூலம் 'எங்கும் ஏறலாம், எங்கும் இறங்கலாம்' எனும் பேருந்து வசதிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. யார் வேண்டுமானாலும் பயணிக்கும் வகையில் 5 பேருந்துகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி சுற்றுலா நட்பு வாகனங்கள் திட்டத்தின் கீழ் 25 ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன.
பேருந்துகளுக்கு பயணக் கட்டணம் இல்லை, அனைவருக்கும் இலவசம். ஆட்டோக்களுக்கு மலிவான கட்டணம் நிர்ணயம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுற்றுலாத்துறை சார்பில் 2, 5, 6 ஆம் தேதிகளில் 3 மணி நேரம் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. இப்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 5 இலவசப் பேருந்துகளும் சோதனை அடிப்படையில் மட்டுமே இயக்கப்படும், அவற்றை தொடர்ந்து நடைமுறைப்படுத்துவது குறித்து ஆலோசனை செய்யப்படும்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:செஸ் ஒலிம்பியாட் போட்டி: தயார் நிலையில் மகாபலிபுரம்!