சென்னை: 44ஆவது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் சிறப்பாக நடைபெற்றுக்கொண்டு வருகிறது.
இதன்தொடக்க விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பெருவிமரிசையாகவே கொண்டாடப்பட்டது. இப்போட்டி இந்தியாவில் அதுவும் சென்னையில் நடைபெறப்போகிறதென்ற அறிவிப்பு வெளியான கணமே போட்டிக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்றன. அந்த ஏற்பாடுகள் அனைத்தும் தமிழையும் தமிழ்நாட்டையும் முன்னிலைப்படுத்திய வண்ணமே இருந்தன.
இப்போட்டியில் பங்கேற்க வரும் வீரர்களை வரவேற்கும் விதமாக உருவாக்கப்பட்ட பாடலில் ஆரம்பித்து, தொடக்க விழாவில் இடம்பெற்ற தமிழின் வரலாறு,கலாசாரம் மற்றும் தமிழர்களின் வீரம், அறம், பண்பாட்டினை பறைசாற்றும் விதமாக இடம்பெற்ற நிகழ்ச்சிகள் வரை அனைத்தும் தமிழையும் தமிழ்நாட்டையும் நன்கு முன்னிலைப்படுத்தின.
இப்போட்டியின் மூலம் தமிழும் தமிழ்நாடும் உலக அரங்கில் தனிக்கவனம் பெற்றிருக்கிறது. இப்போட்டிகளுக்கான ஏற்பாடுகள் அனைத்திலும் “செஸ்” என்ற வார்த்தைக்கான தமிழ் பெயராக “சதுரங்கம்” என்ற வார்த்தையையே தமிழ்நாடு அரசு பயன்படுத்திவந்தது.
இந்நிலையில் தமிழ் எழுத்தாளர்கள் மற்றும் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் எனப்பலர் “சதுரங்கம்” என்ற வார்த்தை சமஸ்கிருத வார்த்தையெனவும் “செங்களம்” என்கிற சொல்லே "செஸ்”க்கான தமிழ் சொல்லாகும் எனக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இப்போட்டியின் மூலம் தமிழை உலக அரங்கில் முன்னிலைப்படுத்திக்கொண்டிருக்கும் தமிழ்நாடு அரசு அத்தோடு "செஸ்”க்கான சரியான தமிழ்ப்பெயரான “செங்களம்” என்ற வார்த்தையையும் சேர்த்து முன்னிலைப்படுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசிற்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இதையும் படிங்க: செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு - புதிய பட்டுச்சேலை அறிமுகம்