சென்னை: சாலையில் வலிப்பு வந்து துடித்துக்கொண்டிருந்த நபரை போக்குவரத்து போலீசார் முதலுதவி அளித்து உயிரைக் காப்பாற்றி உள்ளனர்.
அடையாறு போக்குவரத்து ஆய்வாளர் ரவிச்சந்திரன் தலைமையில் போலீசார் நேற்று (ஜூலை 3)ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அடையாறு ஜிஆர்டி அருகே சாலையில் ஒருவர் வலிப்பு வந்தபடி, கீழே விழுந்து உயிருக்குப்போராடிக்கொண்டிருந்தார்.
இதனைக்கண்ட போக்குவரத்து போலீசார் உடனடியாக சென்று, உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தவரை மீட்டு, ஈரத் துணி கொடுத்து முதல் உதவி அளித்துள்ளார். அதனைத்தொடர்ந்து, 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தற்போது நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, 2 நாட்கள் வரை சாப்பிடாமல் இருந்த அவருக்கு அங்கிருந்த போலீசார் சாப்பாடும் இளநீரும் வாங்கிக் கொடுத்து சாப்பிட வைத்துள்ளனர்.
சென்னை போக்குவரத்து பிரிவில் தெற்கு மாவட்டத்தில் பணியாற்றும் போக்குவரத்து காவலர்களுக்கும் விபத்தில் சிக்குபவர்கள் மற்றும் வலிப்பு ஏற்படுபவர்களுக்கு எவ்வாறு முதலுதவி அளிக்க வேண்டும் என்பது குறித்து சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், பயிற்சி வகுப்புகள் நடத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன் அடிப்படையிலேயே, நேற்று (ஜூலை 3) சாலையில் வலிப்பு வந்து கீழே விழுந்து துடித்துக்கொண்டிருந்த ஒருவரின் உயிரைக் காப்பாற்ற முடிந்தது என போக்குவரத்து போலீசார் பெருமிதம் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: வலிப்பு வந்தது போல் ஆக்டிங் செய்த திருடர்கள் - ஆக்ஷன் காண்பித்த பொதுமக்கள்!