சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் பூண்டி, செம்பரம்பாக்கம், புழல், சோழவரம் ஏரிகள் கடந்த சில நாட்களாக மழையால் நீர் நிரம்பி காணப்படுகிறது. பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்திலிருந்து செம்பரம்பாக்கம், சோழவரம், புழல் ஆகிய ஏரிகளுக்கு நீர் அனுப்பப்பட்டு அங்கிருந்து சென்னையின் குடிநீர் தேவைக்கு பயன்படுத்தப்படுகிறது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் வெப்பம் காரணமாக வறண்டிருந்த பூண்டி ஏரி, செப்டம்பர் மாதம் ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறந்து விடப்பட்ட நீரால் உயர்ந்து வந்தது. இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் மழையால் பூண்டி ஏரி தனது முழு கொள்ளளவான 35 அடியில், 28.65 அடியை எட்டியுள்ளது. இங்கிருந்து செம்பரம்பாக்கத்திற்கு வினாடிக்கு 1,000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
செம்பரம்பாக்கம் ஏரியின் தற்போதைய நீர்மட்டம் 21.13 அடியாக உள்ளது. மொத்த கொள்ளளவு 24 அடியான இதற்கு நீர்வரத்து 1,086 கன அடியாக உள்ளது. இதே நிலை நீடிக்குமானால் இன்று இரவுக்குள் ஏரி 22 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு செம்பரம்பாக்கம் நீர்த்தேக்கம் எட்டும் பட்சத்தில், உபரி நீர் திறக்கப்படும். அதனால் ஏரியின் அருகில் செல்லவோ, குளிக்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து வாயில்களும் மூடப்பட்டு, பொதுப்பணித்துறையினர் நீர்வரத்தையும், மட்டத்தையும் இரவு பகலாக கண்காணித்து வருகின்றனர்.
அதேபோல் புழல் ஏரியில் மொத்தமுள்ள 21.20 அடியில் தற்போது 16.98 அடி நீர் உள்ளது. 18.8 அடி உயரம் கொண்ட சோழவரம் ஏரியில் 13.76 அடி நீர்மட்டம் உள்ளது. இதனால் வரும் ஆண்டுகளில் சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் கனமழை - சென்னை வானிலை ஆய்வு மையம்