இது குறித்து சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ரவீந்திரநாத் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
தமிழ்நாடு அரசு மருத்துவர்கள், ஊதிய உயர்வு வழங்கிட வேண்டும். காலமுறை பதவி உயர்வு வேண்டும். நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்களை நியமிக்க வேண்டும். அரசு மருத்துவர்களுக்குபட்ட மேற்படிப்பில் இட ஒதுக்கீட்டை மீண்டும் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நீண்டகாலமாக போராடி வருகின்றனர். தமிழ்நாடு அரசு மருத்துவர்களின் இந்தக் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ரவீந்திரநாத் செய்தியாளர் சந்திப்பு காலாவதியான மருத்துவ முறைகளை நவீன அறிவியல் மருத்துவத்துடன் இணைந்து நவீன அறிவியல் மருத்துவ வளர்ச்சிக்கு எதிராக மத்திய அரசு செயல்படுவது கண்டிக்கத்தக்கது. எனவே கலப்படம் மருத்துவமுறை திட்டத்தை கைவிட வேண்டும். அகில இந்திய தொகுப்பு மருத்துவ இடங்களுக்கு மாநில அரசுகள் வழங்கும் இளநிலை, முதுகலை மருத்துவ இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை வழங்கிட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்த ஆண்டுக்கான முதுநிலை மருத்துவ நீட் நுழைவுத்தேர்வு மாணவர் சேர்க்கை விளக்க குறிப்பேட்டில் இந்த இடஒதுக்கீடு அறிவிப்பை வெளியிட வேண்டும். எம்ஆர்பி தேர்வில் தேர்ச்சி பெற்று, சான்றிதழ் சரிபார்ப்பு நிறைவுபெற்று பணி நியமனத்திற்காகக் காத்திருக்கும் அனைத்து மருத்துவர்களுக்கும் பணி நியமன ஆணை உடனடியாக வழங்கிட வேண்டும். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி 11ஆம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். மினி கிளினிக்குகள் அனைத்திற்கும் மருத்துவர்கள், செவிலியர்களை தற்காலிக அடிப்டையில் நியமிக்காமல், நிரந்தர அடிப்படையில் நியமிக்க வேண்டும். ஆண்டுதோறும் எம்ஆர்பி சேவையை நடத்தி காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும். நீட் தேர்வினை ஆண்டுக்கு இரண்டு முறை நடத்துவது வரவேற்புக்குரியது. அதே நேரத்தில் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவ இடங்களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு வழங்கிட வேண்டும். சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எதிரே அமைந்துள்ளது. இங்கு போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளதால் மருத்துவமனைக்கு எதிரில் பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு நகரும் நடைமேம்பாலம் அமைக்க வேண்டும். சென்னை மருத்துவக் கல்லூரிக்கும் ராஜீவ்காந்தி மருத்துவமனையில் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு சாலையின் குறுக்கே மேம்பாலம் அமைக்க வேண்டும்"