சென்னை: மத்திய அரசின் கொள்கைகளை எதிர்த்து, மத்திய மற்றும் மாநில அரசு தொழிற்சங்கத்தினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் மார்ச் 28, 29 ஆகிய 2 நாட்கள் இந்தியா முழுவதும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்பேரில் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில், பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், இன்றைய தினம் (மார்ச் 28) பல்வேறு அமைப்பினர் மேற்கொண்டு வரும் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தையொட்டி, சென்னையில் ரயில், பேருந்து மற்றும் ஆட்டோ உள்ளிட்ட பொது போக்குவரத்து சேவைகள் குறைந்துள்ளது.
மக்கள் அவதி: இதனால், பொதுமக்கள் மற்றும் வேலைக்கு செல்வோர் கடும் இன்னல்களை எதிர்கொண்டனர். இத்தகைய சூழ்நிலையை பயன்படுத்தி ஆட்டோ, ஷேர் ஆட்டோக்கள் பொதுமக்களிடம் அதிக பணம் வசூலிப்பதாக புகார்கள் வந்தன. இதையொட்டி, சென்னை போக்குவரத்து காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், எழும்பூர் ரயில் நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையம் மற்றும் இதர பேருந்து நிலையங்களில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டுகளுக்கு நேரில் சென்றனர்.
காவல்துறை எச்சரிக்கை: பின், அங்குள்ள ஆட்டோ ஓட்டுநர்களிடம் வேலை நிறுத்தத்தையொட்டி, போக்குவரத்து சேவைகள் குறைந்துள்ளதால், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பொதுமக்களிடம் அதிக கட்டணம் வசூலிக்க கூடாது என எச்சரிக்கை விடுத்தனர். இதனை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டது. மேலும், அதிக கட்டணம் வசூலித்ததாக பொதுமக்கள் கொடுத்த புகார்களின் பேரில், சம்பந்தப்பட்ட ஆட்டோக்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டன.
புகார் எண்கள்: இருப்பினும் ஆங்காங்கே, வேலை நிறுத்தத்தைப் பயன்படுத்தி அதிக கட்டணம் பெறப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனை அடுத்து, அதிக கட்டணம் வசூலிக்கும் ஆட்டோ, ஷேர் ஆட்டோ ஓட்டுநர்கள் குறித்து புகாரளிக்கலாம் என்று சென்னை மாநகர காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. எனவே, பொதுமக்கள் காவல் அவசர எண் - 100, போக்குவரத்து அவசர உதவி எண் - 103, போக்குவரத்து காவல் வாட்சப் எண் - 9003130103 மற்றும் சென்னை பெருநகர காவல், சமூக வலைதளங்களில் புகார்கள் கொடுக்கலாம் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தாலிபான்களுடன் ஒப்பிட்ட பாஜக.. அடித்து நொறுக்கிய மம்தா.. மேற்கு வங்கத்தில் பரபரப்பு!!