சென்னையில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சென்னை முழுவதும் இரண்டாயிரத்து 600 விநாயகர் சிலைகளில் கடைசி நாளான இன்று ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் சென்னையில் திருவொற்றியூர், காசிமேடு, பட்டினப்பாக்கம், நீலாங்கரை, எண்ணூர் உள்ளிட்ட இடங்களில் கரைக்கப்பட உள்ளன.
இதனால் விநாயகர் ஊர்வலத்தை முன்னிட்டு கோடம்பாக்கம் மேம்பாலத்தில் மட்டும் பாதுகாப்பு கருதி 33 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதேபோல் விநாயகர் சிலைகள் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்படும் முக்கியச் சாலைகளில் மட்டும் 238 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
அதுமட்டுமின்றி விநாயகர் ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டு சிலைகள் கரைக்க கடைசி நாளான இன்று எந்தவித அசம்பாவிதமும் நிகழாமல் தடுப்பதற்காக சென்னை முழுக்க பத்தாயிரம் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதில் முக்கியமாக பட்டினம்பாக்கம், நீலாங்கரை கடற்கரையில் அதிக அளவில் பெரிய விநாயகர் சிலையை வருடம் வருடம் கரைக்கப்பட்டுவருகிறது. அதற்காக போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக அப்பகுதிகளை இணைக்கும் பல்வேறு சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பதற்காக கொண்டுவரப்படுகிறது. வள்ளுவர் கோட்டம் பகுதியில் நூற்றுக்கணக்கான சிலைகளை காவல் துறையினர் ஒழுங்குபடுத்தி கடலை நோக்கி அனுப்பிவருகின்றனர். பொதுமக்கள் விநாயகர் சிலைகளை உற்சாகத்துடன் ஆடிப்பாடி கொண்டுசெல்கின்றனர்.