சென்னை:சென்னை புரசைவாக்கம் கெல்லீஸ் சிக்னல் அருகே திங்கள் இரவு (ஏப்ரல் 18) தலைமைச் செயலக காலனி காவல் நிலைய உதவி ஆய்வாளர் புகழும் பெருமாள் தலைமையிலான காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்த போது, ஆட்டோவில் சந்தேகத்திற்கிடமாக இருவர் இருந்தது தெரியவந்தது. அவர்களை சோதனை செய்த போது, இடுப்பில் பட்டாக்கத்தி மற்றும் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
கஞ்சா மற்றும் கத்தியைப் பறிமுதல் செய்த காவல்துறையினர்,அவர்களை கைது செய்து அயனாவரம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் திருவல்லிக்கேணியைச் சேர்ந்த ரமேஷ் என்ற ஜொல்லு சுரேஷ்(28) என்பதும், பட்டினப்பாக்கத்தைச் சேர்ந்த ரவுடி விக்னேஷ் (25) என்பதும் தெரியவந்தது.
குற்றவாளிகள்: பெயிண்டர் வேலை செய்து வரக்கூடிய ரமேஷ் மீது ராஜமங்கலம், கண்ணகி நகர், மெரினா, துரைப்பாக்கம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, வழிப்பறி உட்பட பல வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. மேலும் குதிரை ஓட்டுபவரான விக்னேஷ் மீது மெரினா, பட்டினப்பாக்கத்தில் இரவு நேரத்தில் வீடு புகுந்து திருடும் வழக்கு நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது.
இதனையடுத்து நேற்று(ஏப்ரல் 19) காலை தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்திற்கு இரண்டு பேரை அழைத்து வந்து விசாரணை நடத்திய போது, திடீரென விக்னேஷிற்கு வலிப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. உடனே விக்னேஷை மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போது வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரேதப் பரிசோதனை: விசாரணை கைதி காவல் நிலையத்தில் சந்தேகமான முறையில் மரணமடைந்த தகவல் அறிந்து துறை ரீதியிலான விசாரணைக்கு சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். சென்னை காவல்துறை மேற்கு மண்டல இணை ஆணையர் பிரபாகரன் நேரடியாக தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்திற்கு சென்று கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் கார்த்திகேயன் மற்றும் உயிரிழந்த விக்னேஷிடம் விசாரணை நடத்திய உதவி ஆய்வாளர் புகழும் பெருமாள், தலைமைக் காவலர் தீபக், காவலர் பவுன்ராஜ் ஆகியோரிடட் விசாரணை மேற்கொண்டார்.
சந்தேகமான முறையில் இறந்த விக்னேஷின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில் உடற்கூராய்வு நாளை நடைபெற உள்ளது.
மேலும் காவல் நிலையத்தில் சந்தேக மரணம் அடைந்திருப்பதால் வழக்குப்பதிவு செய்து தலைமைச் செயலக காலனி காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். சட்டப்பேரவை நடந்து கொண்டிருக்கும் வேளையில் காவல் நிலையத்தில் விசாரணை கைதி மரணம் அடைந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க:ஆளுநருக்கே பாதுகாப்பு இல்லை.. சாதாரண மக்களுக்கு தமிழக அரசு எவ்வாறு பாதுகாப்பு அளிக்கும் - எடப்பாடி பழனிசாமி கேள்வி