சென்னை: சென்னை மகாபலிபுரத்தில் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி கடந்த 30ஆம் தேதி தொடங்கி இன்றுடன் நிறைவடைந்தது. சென்னையில் முதன்முதலாக உலக செஸ் ஒலிம்பியாட் நடைபெறுவதால் புதிய முறையில் அரசு சார்பில் விளம்பரங்கள் செய்யப்பட்டன. குறிப்பாக சென்னையில் மிகவும் பிரசித்திப்பெற்ற இடமான நேப்பியர் பாலத்தில் செஸ் போர்டு வடிவில் பெயிண்ட் அடித்தது பொதுமக்களை வெகுவாகக் கவர்ந்தது. அந்த வகையில் தீக்குச்சி மற்றும் பல்குத்தும் குச்சியை பயன்படுத்தி காவல் ஆய்வாளர் ஒருவர், 2.5x2.5 செ.மீ அளவில் செஸ் போர்டு வடிவமைத்து அசத்தியுள்ளார்.
சென்னை வளசரவாக்கம் காவல் ஆய்வாளரான வீராசாமி நுண்கலை சிற்பங்கள் செய்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். தனது இளம் வயது முதலே நுண்கலையில் மிகுந்த ஆர்வம் கொண்ட அவர், பென்சில் லெட், சாக்பீஸ், தீக்குச்சி போன்ற பொருட்களைப் பயன்படுத்தி புத்தர், திருவள்ளுவர், பென்னிகுவிக், அப்துல் கலாம் போன்றோரின் நுண்கலை சிற்பங்களை செய்துள்ளார்.
குறிப்பாக கடந்த 1999 ஆம் ஆண்டு இவர் வெறும் கையால் பிளேடு மற்றும் சர்ஜிக்கல் கத்தியை பயன்படுத்தி பிளாஸ்டிக் மூலம் 8x8 மி.மீ அளவிலான செஸ் போர்டு மற்றும் 0.8 மி.மீ செஸ் காயின்களை உருவாக்கினார். இது உலகிலேயே வெறும் கையால் செய்யப்பட்ட நுண்ணிய செஸ் போர்டு என Assist World Record Association ஆய்வாளர் வீராசாமிக்கு சான்றிதழை வழங்கியது.
அதுமட்டுமல்லாமல் பணிக்குச் சேர்ந்த பின்னும் பல்வேறு நுண்கலைச் சிற்பங்களை செய்து பொதுமக்கள் பார்வைக்கு காட்சிப்படுத்தி வந்த இவருக்கு, கடந்த 2006ஆம் ஆண்டு தமிழக அரசு கலை வளர்மணி என்ற விருதை வழங்கி கௌரவித்தது.
இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை குறிக்கும் வகையில், காவல் ஆய்வாளர் வீராசாமி நுண்கலை சிற்பமாக செஸ் போர்டு ஒன்றை தயாரித்துள்ளார். பல்குத்தும் குச்சி, தீக்குச்சி மற்றும் பென்சில் லெட் ஆகியவற்றை பயன்படுத்தி அக்ரலிக் பெயிண்டால் வண்ணம் பூசி 2.5x2.5 செ.மீ அளவிலான செஸ் போர்டு மற்றும் 2 மி.மீ சுற்றளவு கொண்ட செஸ் காயின்களை சுமார் 28 மணி நேர உழைப்பின் மூலம் உருவாக்கியுள்ளார்.
ஓய்வு நேரங்களில் சுமார் 28 மணி நேரத்தை ஒதுக்கி இந்த செஸ் போர்டு நுண்கலை சிற்பத்தை செய்து முடித்துள்ளார். அதை சென்னை காவல் ஆணையரிடம் காட்டி பாராட்டையும் பெற்றுள்ளார்.
செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னையில் நடைபெற்றதை நினைவுகூறும் வகையில் இந்த செஸ் போர்டை உருவாக்கியதாக காவல் ஆய்வாளர் வீராசாமி தெரிவித்தார். மேலும், இளைஞர்கள் பொழுதுபோக்கிற்காக ஆன்லைன் விளையாட்டு, சமூக வலைதளங்கள் உள்ளிட்டவற்றில் மூழ்கிப்போவதை விட, இதுபோன்ற அவரவருக்குப் பிடித்த செயல்பாடுகளை ஆர்வத்துடன் செய்வது நல்லது என தெரிவித்தார்.