சென்னை மயிலாப்பூர் காவல் நிலையத்திற்குட்பட்ட இடங்களில், தொடர்ந்து செல்போன் பறிப்பு புகார்கள் தொடர்ந்து வந்துகொண்டிருந்தன. இது தொடர்பாக அப்பகுதி காவல் துறையினர் இதற்கென்று ஒரு தனிப்படை அமைத்து, அங்குள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து குற்றவாளிகளைத் தேடிவந்தனர். அப்போது கொள்ளையர்கள் முகமூடி அணிந்து கொண்டு, தலைக்கவசத்துடன் கொள்ளையடிப்பது தெரிய வந்தது.
இந்நிலையில், அவர்கள் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தின் எண்ணும் போலியானது என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் தொடர் கொள்ளையில் ஈடுப்படும் பழைய குற்றவாளிகளை கைது செய்து விசாரித்தபோது ராம்பி (20), யுகேஸ்வர் (20), சிவகுமார் (21), முகம்மது நசீர் (36) ஆகிய நான்கு நபர்கள் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.
அவர்களிடமிருந்து 3 செல்போன்கள் மற்றும் கொள்ளையடிக்க பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனத்தையும் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். கொள்ளையடித்த செல்போன்களின் ஐஎம்ஐ எண்ணை மாற்றி கொடுக்கும் நபர்களை பற்றியும் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.