சென்னை: கரோனா பெருந்தொற்று சமயத்தில், இன்னல்களைச் சந்திக்கும் பொதுமக்களுக்கு உதவிட தொண்டு நிறுவனங்களுக்கு சென்னை மாநகராட்சி ஆணையாளர் கோ. பிரகாஷ் அழைப்பு விடுத்திருக்கிறார்.
அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்;
தமிழ்நாட்டில் கரோனா நோய்த்தொற்று தடுப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய தொடர் பாதுகாப்பு நடவடிக்கைகளையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் முதலமைச்சர் பழனிசாமி தொடர்ந்து கண்காணித்து வருகிறார். இது தொடர்பாகப் பல்வேறு ஆய்வுக் கூட்டங்கள் நடத்தி, பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்தும், அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.
தீயணைப்புத் துறையின் வெறித்தன விழிப்புணர்வு
அதனைத் தொடர்ந்து பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில், கரோனா பெருந்தொற்று குறித்து விழிப்புணர்வும், கிருமிநாசினி தெளித்தும், வீடுகளில் கொசுப்புழுக்களை ஆய்வு செய்யும் பணியாளர்களைக் கொண்டு வீடுதோறும் சென்று சளி, இருமல், காய்ச்சல் உள்ளனவா எனக் கணக்கெடுக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், பொதுமக்கள் அதிகம் கூடும் வழிப்பாட்டுத்தலங்கள், வணிக வளாகங்கள் போன்ற இடங்களில் மக்கள் அதிகம் கூடுவதைத் தவிர்க்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும், பெருநகர சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் உள்ள வீடற்றோர், மாநகராட்சி காப்பகங்களிலும், பல்வேறு மாநிலங்களிலிருந்து ரயில் சேவை ரத்து செய்யப்பட்டதன் காரணமாக, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்த பயணிகள் சமுதாயக் கூடங்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மாநகராட்சியின் சார்பில் உணவும், மருத்துவப் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கரோனாவைத் தடுக்க தமிழ்நாடு முழுவதும் 144 தடை உத்தரவு!
மேற்குறிப்பிடப்பட்டுள்ள கரோனா நோய்க் கிருமித் தொற்று தடுப்பு நடவடிக்கை பணிகளில் பெருநகர சென்னை மாநகராட்சியுடன் இணைந்து தங்களை ஈடுபடுத்திக்கொள்ள ஆர்வமுள்ள தனி நபர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், அரசு சாரா அமைப்புகள் மாநகராட்சியின் இணையதளமான www.chennaicorporation.gov.in என்ற முகவரியில் தங்கள் விவரங்களைப் பதிவு செய்ய வேண்டுமென மாநகராட்சி ஆணையாளர் கோ. பிரகாஷ் கேட்டுக்கொண்டுள்ளார்.