சென்னை: இரவு நேர ஊரடங்கை முன்னிட்டு சென்னை மெட்ரோ ரயில் பயண நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
அதிகரித்து வரும் கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், தமிழ்நாடு அரசு நாளை (ஏப். 20) முதல், இரவு 10 மணியிலிருந்து காலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவித்துள்ளது.
இதனையடுத்து சென்னை மெட்ரோ ரயில் பயண நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, காலை 5:30 மணியிலிருந்து இரவு 9:30 மணி வரை மட்டுமே மெட்ரோ ரயில் சேவைகள் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கக்கூடிய நேரங்களில் 5 நிமிடத்திற்கு ஒரு மெட்ரோ ரயிலும், பிற நேரங்களில் பத்து நிமிடத்திற்கு ஒரு மெட்ரோ ரயிலும் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக சென்னை மெட்ரோ ரயில் சேவை இரவு 11 மணி வரை இயக்கப்படும்.
அனைத்து ரயில் நிலையங்களிலும் கடைசி ரயில் 8.55 முதல் 9.05 மணிக்கு புறப்பட்டு 9.50 மணிக்கு கடைசி ரயில் சென்றடையும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.