சென்னையை அடுத்த குன்றத்தூர் வெங்கடாபுரத்தைச் சேர்ந்தவர் ஹரி பிரசாத் (20). இவர் மீனம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் இளநிலை 2ஆம் ஆண்டு படித்துவந்தார். ஹரி பிரசாத் கல்லூரியிலிருந்து மீனம்பாக்கம் ரயில் நிலையத்திற்கு வந்துள்ளார்.
தண்டவாளத்தை அவர் கடக்க முயன்றபோது கூடூருக்கு சென்ற சரக்கு ரயில் எதிர்பாராதவிதமாக அவர்மீது மோதியது. இதில் படுகாயமடைந்து உயிருக்குப் போராடிய ஹரி பிரசாத்தை மீட்டு அவருடைய நண்பர்கள் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர்.

ஆனால், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே ஹரி பிரசாத் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இது குறித்து ரயில்வே காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.
இதையும் படிங்க: ஆசிரியர் தாக்கி மாணவன் கை எலும்பு முறிவு!