கரோனா தொற்று உலகம் முழுவதும் சுமார் 184 நாடுகளில் பரவி ஆயிரக்கணக்கான மக்களின் உயிரை பறித்துள்ள நிலையில், இந்தியாவிலும் அதன் பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் கரோனா தொற்று பரவிய வண்ணம் இருக்கிறது.
மகாராஷ்டிரா, டெல்லி ஆகிய மாநிலங்களுக்கு அடுத்தப்படியாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில்தான் உள்ளது. இப்பெரும் தொற்றால் இதுவரை மாநிலத்தில் 1,596 பேர் பாதிக்கப்பட்டும், 18 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.
ஊரடங்கு காரணமாக மருத்துவத்துறை பணியாளர்கள், காவல்துறையினர், பத்திரிகையாளர் என குறிப்பிட்டத்துறை பணியாளர்கள் மட்டுமே வெளியில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் என பத்திரிகை மற்றும் காட்சி ஊடக பணியாளர்களும் கரோனா தொற்றுக்கு உள்ளாகி வருவது அதிகரித்து வருகிறது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர், சென்னை ராயபுரத்தில் செயல்பட்டு வரும் தனியார் தொலைகாட்சியின் ஊழியர் ஒருவருக்கும், மைலாப்பூரில் செயல்படும் நாளிதழ் ஒன்றின் செய்தியாளருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட தொலைக்காட்சி ஊழியரின் அலுவலகத்தில் பரிசோதனை செய்தபோது, மேலும் 27 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டதும் கண்டறியப்பட்டது. இதனையடுத்து, அத்தொலைக்காட்சி நிறுவனம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
இதனிடையே, பாதிக்கப்பட்ட நபருடன் யார் யார் தொடர்பில் இருந்தனர் போன்ற விவரங்களை அலுவலர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களில் 19 பேர் ஓமந்தூரார் அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனையிலும், மற்றவர்கள் வேறு மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இரு தினங்களுக்கு முன்னர் செய்தியாளர்கள் 265 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், வேறு ஒரு தனியார் தொலைகாட்சியில் பணியாற்றி வரும் ஐந்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவரை வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள், சமய மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் என பாதித்து வந்த கரோனா தொற்று, அண்மை நாட்களாக பத்திரிகை மற்றும் காட்சி ஊடகப் பணியாளர்களுக்கும் பரவி வருவது அத்துறையினரிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 'கரோனா பணியில் ஈடுபடுபவர்களிடம் வீட்டைக் காலி செய்ய வற்புறுத்தக் கூடாது; மீறினால் சட்ட நடவடிக்கை' - அரசு எச்சரிக்கை