சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற சிறப்பு கவாத்து அணிவகுப்பில் கலந்துகொண்ட சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் ஆயுதப்படை காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். மேலும், சென்னை பெருநகர காவல் துறையில் சிறப்பாகப் பணிபுரிந்த 608 ஆண், பெண் காவலர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சரின் காவல் பதக்கங்களை வழங்கி கௌரவித்தார்.
முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய விஸ்வநாதன், ”தூய்மையாகக் காவல் நிலையங்களைப் பராமரித்தது, போக்குவரத்துக் காவல் துறையில் பல நவீனமயமான திட்டங்களைச் செயல்படுத்தியது உள்ளிட்ட சீரிய பணிகளுக்காகச் சென்னை காவல் துறைக்கு ஸ்காட்ச் நிறுவனம் மூன்று விருதுகளை அளித்து பெருமைப்படுத்தியுள்ளது.
மேலும், தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின்பேரில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் பொருட்டு மூன்றாம் கண் எனப்படும் சிசிடிவி கேமராக்களை மாநகரம் முழுவதும் பொருத்தி சென்னையைப் பாதுகாப்பான நகரமாக மாற்ற கடுமையாக உழைத்து வரும் காவல் துறையினருக்கும் பொதுமக்களுக்கும் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
காவல் துறையினர் எஜமானர்கள் அல்ல; சீர்திருத்தவாதிகள் என்ற மகாத்மா காந்தியின் கூற்றுக்கேற்ப ஒவ்வொருவரும் விளங்கவேண்டும். நமது பணியைப் பாராட்டி மக்கள் நமக்கு அளிக்கும் வாழ்த்துகளே நமது பெருமை” என்றார்.
இதையும் படிங்க: வாகன ஓட்டிகளை மிரட்டி, வசூல் வேட்டை செய்த போக்குவரத்து காவல் ஆய்வாளர்