கரோனா தொற்றை தடுக்க மருந்து கண்டுபிடித்துள்ளதாகவும், அதனை தமிழ்நாடு அரசு புறக்கணிப்பவதாகவும் கூறி சமூக ஊடகங்களில் முதலமைச்சருக்கு எதிராக திருத்தணிகாச்சலம் வீடியோ பதிவு வெளியிட்டிருந்தார்.
இதையடுத்து அவருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்த சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர், அவரை கைது செய்து, பின்னர் குண்டர் தடுப்பு சட்டத்திலும் சிறையில் அடைத்தனர்.
குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்யக்கோரி திருத்தணிகாச்சலத்தின் தந்தை கலியபெருமாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன், வேல்முருகன் அமர்வில் விசாரணை நடைபெற்று வந்தது. அப்போது இந்தியாவில் சித்த மருத்துவத்தை ஊக்குவிக்காதது குறித்து மத்திய, மாநில அரசுகளுக்கு நீதிபதிகள் பல்வேறு கேள்விகள் எழுப்பி இருந்தனர். மேலும், மற்ற மருத்துவ முறைகளை போன்று இந்திய மருத்துவ முறையையும் சமமாக ஊக்குவிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினர்.
இந்நிலையில் இந்த வழக்கில் இன்று(நவ.10) தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் கிருபாகரன், வேல்முருகன் அடங்கிய அமர்வு, சித்த மருத்துவர் திருத்தணிகாச்சலத்தை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர்.
மேலும், திருத்தணிகாச்சலம் ஏற்கனவே அனைத்து வழக்குகளிலும் ஜாமின் பெற்றுவிட்ட நிலையில் தற்போது அவர் மீதான குண்டர் சட்டமும் ரத்து செய்யப்பட்டுள்ளதால், சிறையில் இருந்து விரைவில் அவர் வெளியே வருவார் என கூறப்படுகிறது.
இதையும் படிங்க: அத்துமீறுகிறதா ஆதிப்பெரு உயிர் - ஆக்கிரமிக்கப்படும் யானையின் வலசை பாதைகள்!