சென்னை; கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த அரசு எடுக்கும் நடவடிக்கைகளை கண்காணிப்பது தொடர்பாக தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழ்நாடு, புதுச்சேரிக்கு தடுப்பூசி, மருந்து ஒதுக்கீடு குறித்து மத்திய அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் தமிழ்நாட்டிற்கான ஆக்சிஜன் ஒதுக்கீடு 650 டன்னாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், கறுப்பு பூஞ்சை நோய்க்கான லைசோசோமால் மருந்து ஒதுக்கீடு குறித்தும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
![சென்னை உயர் நீதிமன்றம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-02-suomotuproceedings-script-7204624_27052021170631_2705f_1622115391_958.jpeg)
தமிழ்நாடு அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், மத்திய அரசின் ஆக்சிஜன் ஒதுக்கீடு தவிர்த்து, சொந்தமாக உற்பத்தி செய்யப்படுவதாகவும், ஆக்சிஜன் செறிவூட்டிகள் அமைக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டிருந்தது.
நர்சிங் மாணவிகளும் கரோனா தடுப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாகவும், தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கான கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசிற்கு பாராட்டு:
இந்த வழக்கில் இணைத்துக் கொண்ட வழக்கறிஞர்கள், கரோனா பரிசோதனை முடிவுகள் வருவதில் தொடர்ந்து தாமதம் நிலவுவதாகவும், மனநல காப்பகங்களில் உள்ளவர்களுக்கும் கரோனா சிகிச்சை வழங்க வேண்டும் எனவும், கரோனா பாதித்து பலியானவர்களின் உடல்களை முழுவதுமாக மூடி விடுவதால் உறவினர்களால் அவர்களின் முகத்தை பார்க்க முடிவதில்லை என்பதால் முகம் மட்டும் தெரியும் வகையில் கொடுக்க உத்தரவிட வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.
இதையடுத்து, தமிழ்நாடு அரசின் அறிக்கை குறித்து திருப்தி தெரிவித்த நீதிபதிகள், இந்த வழக்கை பொறுத்தவரை, தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகளுக்கு உதவியாகவே செயல்படுவதாகவும், நீதிமன்றம் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதியல்ல என்றும் நீதிமன்றம் அரசை நடத்த முடியாது என்றும் குறிப்பிட்டனர்.
தமிழ்நாடு அரசிற்கு அறிவுரை:
பின்னர், கரோனாவில் உயிரிழந்தவர்களின் உடலுக்கு அடக்கம் செய்வதற்கு முன்பு உறவினர்கள் இறுதியாக பார்ப்பதற்கும், உடலை அடையாளம் காண்பதற்கும் ஏதுவாக முகம் மட்டும் தெரியும் வகையில் பொதிய வேண்டுமென அறிவுறுத்தினர்.
![கரோனா தடுப்புப் பணியில் ஸ்டாலின்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/11920666_thum.jpg)