சென்னை: லஞ்ச ஒழிப்புத் துறையில் பணியாற்றிய ஐஜி, தனக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அதே துறையில் பணியாற்றிவந்த பெண் எஸ்பி 2018ஆம் ஆண்டில் புகார் அளித்தார்.
அந்தப் புகாரின் மீது அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என உயர் நீதிமன்றத்தில் பெண் எஸ்பி வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கில் சிபிசிஐடி விசாரணை தொடரலாம் என தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் ஐஜி மேல்முறையீடு செய்தார்.
வழக்கு விசாரணை தள்ளிவைப்பு
அந்த வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, சிபிசிஐடி மற்றும் விசாகா குழு விசாரணைகளை தெலுங்கானாவிற்கு மாற்றியும், அதன் விசாரணை அறிக்கைகளை ஆறு மாதத்தில் தாக்கல்செய்யவும் 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தாக்கல்செய்த வழக்கில், பாலியல் புகார் தொடர்பான வழக்கு விசாரணையை தெலங்கானாவுக்கு மாற்றிய சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வின் உத்தரவை ரத்துசெய்து தீர்ப்பளித்தது.
இதையடுத்து, 2019ஆம் ஆண்டில் ஐஜி தொடர்ந்த மேல்முறையீடு செய்த வழக்கு, நீதிபதிகள் எம். துரைசாமி, ஜெ. சத்திய நாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அதில் மனுதாரர் தரப்பில் வாதங்களை முன்வைக்க அவகாசம் கோரியதையடுத்து, வழக்கு விசாரணையை ஜனவரி 28ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.
இதையும் படிங்க: தமிழ்நாடு காவல் துறை மீது டிஜிபி அலுவலகத்தில் அதிமுக புகார்