சென்னை: விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகில் உள்ள இலுப்பையூரில் கடந்த 1966ஆம் ஆண்டு கட்டப்பட்ட நூலகம், மோசமான நிலையில் இருப்பதாகவும், வாசகர்களுக்கு அச்சுறுத்தலாக உள்ள நூலக கட்டடத்தை புதுப்பிக்க கோரி அந்த பகுதியைச் சேர்ந்த நாகராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் கே.செல்வராஜ், பொது நூலகத் துறை தரப்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் மைத்ரேயி சந்துரு ஆகியோர் ஆஜரானர்.
அப்போது பொது நூலகத் துறை தரப்பில், நிதிப் பிரச்சினை காரணமாக நூலகத்தை புதுப்பிக்க இயலவில்லை. எம்பி, எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் நூலகத்தை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது வேறு கட்டிடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.
இதைப் பதிவு செய்த நீதிபதிகள், புதிய கிளை நூலகம் கட்டப்பட்டு அங்கு மாற்றப்பட்ட போதும், பழைய நூலகத்தை புதுப்பிக்க உரிய நிதியைப் பெற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது நூலக துறைக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.
இதையும் படிங்க: 'இட ஒதுக்கீடு; உழைப்பைத் திருட முயற்சிக்கும் திமுக!'