சென்னை: எடப்பாடி பழனிசாமி கூட்டிய பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து ஜூலை 11ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி கூட்டிய பொதுக்குழு செல்லும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் தீரப்பளித்துள்ளது.
உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பால் எடப்பாடி பழனிசாமி தரப்பு உற்சாகம் அடைந்துள்ளது. இந்நிலையில், உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்த பின்னர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் முகப்பு பக்கத்தில் மீண்டும் 'அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர்' எனப் பதிவிட்டுள்ளார்.
மேலும் சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி தனது வீட்டில் தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். மேலும் தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.
அரசியலில் இனி ஓபிஎஸ்ஸின் எதிர்காலம் ஜீரோ தான் - ஜெயக்குமார்: இது குறித்து செய்தியாளரிடம் பேசிய ஜெயக்குமார், ”சென்னை உயர் நீதிமன்றத்தில் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு தனி நீதிபதியின் உத்தரவுக்கும் தடைவிதித்துள்ளது. அதிமுக சட்ட விதிகளின்படி பொதுக்குழு உறுப்பினர்களால் ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு செல்லும் எனவும்; பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதும் செல்லும் என இந்தத் தீர்ப்பின் மூலம் தெரிய வந்துள்ளது.
கட்சியில் இருந்து ஓ. பன்னீர்செல்வம் நீக்கப்பட்டதும் செல்லும். அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும். அரசியலில் இனி ஓபிஎஸ்ஸின் எதிர்காலம் ஜீரோ தான். அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்களும் மகிழும் வகையில் தீர்ப்பு வந்துள்ளது. அதிமுக பொதுக்குழு வழக்கில் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு”, எனத் தெரிவித்துள்ளார்.
கற்பனை கடலில் மிதந்து கொண்டிருக்கிறார் ஓபிஎஸ் - பொன்னையன்: இந்தத் தீர்ப்பு குறித்து அதிமுகவின் மூத்த தலைவர் பொன்னையனிடம் பேசிய போது, ”பொதுக்குழு உறுப்பினர்கள் 98.5% ஒற்றைத்தலைமை தான் வேண்டும் என்ற ஒரு முடிவை எடுத்து இருக்கிறார்கள். அது செல்லும் என்று நீதிமன்றம் தீர்ப்பை வழங்கியுள்ளது. பொதுக்குழு சட்டப்படிதான் நடந்தது என்பதை உறுதிப்படுத்தும் தீர்ப்பாக இது அமைந்துள்ளது.
பலாத்காரம், கொலை, கொள்ளை, அளவு கடந்த பொய்யை, அணிகலன்களாக கொண்டு ஆட்சி நடத்துகின்ற ஸ்டாலின் ஆட்சி ஒரு குப்பைத்தொட்டி ஆட்சி என்று மக்களுக்கு உணர வைக்கக்கூடிய ஒரு தலைமைக்கு கிடைத்த வெற்றி தான் இது. எடப்பாடி பழனிசாமிக்கும் பொதுக்குழுவுக்கும் கிடைத்த முழுமையான வெற்றி, இதுதான் உண்மை நிலை.
தன்னைப் பெற்ற தந்தை, கடவுளைப் போல வணங்கியது கருணாநிதியை என்றும்; கருணாநிதியின் வசனங்களை மனப்பாடம் செய்து ஒப்புவிப்பேன் என்றும் ஓபிஎஸ் சொன்னார். அவரது மகன் ரவீந்திரநாத் ஸ்டாலினிடம், ஒன்றரை ஆண்டுகள் ஆட்சி சிறப்பாக உள்ளது என்று சொன்னார். இப்படியாக ஓபிஎஸ்ஸைப் பொறுத்தவரை எப்போது திமுகவை பாராட்டினாரோ அப்போதே ஓபிஎஸ்ஸும், ஓபிஎஸ்சை சார்ந்தவரும் செல்லா காசாகிவிட்டனர்.
வெறும் ஒன்றரை விழுக்காடு ஆதரவை மட்டும் கையில் வைத்துக்கொண்டு உலகத்தையே ஆண்டு விடுவேன் என்று கற்பனை கடலில் மிதந்து கொண்டிருக்கிறார் ஓபிஎஸ். எடப்பாடி பழனிசாமிக்கும், பொதுக்குழுவுக்கும், எம்ஜிஆர், அண்ணா, ஜெயலலிதா, ஆகியோருக்கு கிடைத்த வெற்றி இது. இரட்டைத் தலைமை இந்தியாவில் எங்கும் இல்லை. காரணம் இரு மனங்களின் எண்ணங்கள் மனிதனுக்கு மனிதன் வேறுபடும்.
இரட்டைத்தலைமை இருக்கிற போது செயல்திட்டங்கள் தாமதப்படும். கொள்கை முடிவுகள் எல்லாம் தாமதப்படும். எப்படிப்பட்ட கருத்துகளை மக்களுக்கு எடுத்துச்சொல்வது என்ற எண்ணற்ற சிக்கல், இப்படியாக இரட்டைத் தலைமை என்பது நடைமுறைக்கு ஒவ்வாத ஒன்று, மக்களுக்குப் பயன்படாத, கட்சி வளர்ச்சிக்கு குந்தகத்தை விளைவிக்கக்கூடிய ஒன்று.
எனவே, ஒற்றைத்தலைமை தான் என ஏக மனதாக முடிவினை எடுத்து நடைமுறையைப்படுத்தும்போது, விரைவு இருக்கும். தெளிவு இருக்கும். அதுபோல இயக்க வளர்ச்சிக்கு உத்வேகம் இருக்கும். எனவே, எந்த ஒரு இயக்கத்திற்கும் ஒற்றைத்தலைமை தான் என்றும் இருக்க வேண்டும்”, எனத் தெரிவித்தார்.
ஓ.பன்னீர்செல்வம் தரப்பு: அதிமுக பொதுக்குழு தொடர்பாக உயர்நீதிமன்ற இருநபர் அமர்வு இன்று அளித்த தீர்ப்பை எதிர்த்து டெல்லி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என பெரியகுளத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி அளித்துள்ளார்.
மேலும், “தேர்தல் ஆணையத்தின் படி ஓ.பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளராகவும், எடப்பாடி பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளராகவும் உள்ளனர்” என கோவை செல்வராஜ் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் அடுத்த கட்டம் என்ன?: இந்த தீர்ப்பு ஓ.பன்னீர்செல்வம் மற்றும் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களிடம் சற்று கலக்கத்தை உண்டாக்கியுள்ளது. இது எடப்பாடி பழனிசாமிக்கு மேலும் கூடுதல் பலம் வழங்கியுள்ளது.
இதனால் கட்சியில் ஒற்றைத் தலைமையைக் கொண்டு, தனக்கு ஆதரவாளர்களாக இருப்பவர்களுக்குப் பதவியும், எதிர் கருத்துடையவர்களை கட்சியை விட்டு நீக்கவும் எடப்பாடி பழனிசாமிக்கு முழு அதிகாரம் உண்டு.
எனவே, மீண்டும் ஒரு தர்ம யுத்தத்தை கையில் எடுப்பாரா ஓ.பன்னீர்செல்வம், மேலும் இதற்கு உறுதுணையாக சசிகலா, டிடிவி தினகரன் இருப்பார்களா எனப் பல கேள்விகள் எழுந்துள்ளன.
இதையும் படிங்க: அதிமுகவின் பொதுக்குழு செல்லாது என்ற நீதிபதி உத்தரவு ரத்து - தீர்ப்பின் முழுவிவரம்