வடகிழக்குப் பருவ மழை தொடங்கி இருக்கும் இந்த நிலையில், தமிழ்நாட்டில் அதிக வெள்ளப் பாதிப்பிற்கு உள்ளாகும் நகரம் என்று சென்னையை தேர்வு செய்திருக்கிறது மாநில அரசு. ஏற்கனவே 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட பெரும் வெள்ளப் பாதிப்புகளிலிருந்து கசப்பான பாடம் கற்றுக்கொண்ட தமிழ்நாடு அரசு, இந்த முறை பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
மத்திய அரசின் 'ஆப்த மித்ரா ' திட்டத்தின் கீழ் திறமையான நீச்சல் உள்ளிட்ட தகுதிகள் நிறைந்த பொதுமக்களில் நூறு பேரைத் தேர்வு செய்து, அவர்களுக்கு 12 நாட்கள் பேரிடர் மேலாண்மை நிபுணர்கள் சார்பில் பயிற்சியளித்து, முதல் உதவி நிபுணர்களாக மாற்றியுள்ளது சென்னை மாநகராட்சி.
வெள்ளப் பாதிப்பின்போது எவ்வாறு பொதுமக்களைக் காப்பாற்ற வேண்டும் அவர்களுக்கு எப்படி முதலுதவிகளைச் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட முறையான பயிற்சிகள் இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
பர்ஸ்ட் ரெஸ்பாண்டர்ஸ் (First Responder) எனச் சொல்லப்படும் இவர்களின் பயன்பாட்டிற்காக, அவசர காலங்களில் பயன்படுத்தப்படும் டார்ச், கத்தி, கையுறைகள், கயிறு, மருந்துகள் உள்ளிட்ட அனைத்து வகைப் பொருட்கள் அடங்கிய பை ஒன்றும் இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
’வருமுன் காப்போம்’ என்ற பழமொழிக்கு ஏற்ப வெள்ள பாதிப்பிலிருந்து தற்காத்துக்கொள்ள சென்னை மாநகராட்சி எடுத்துள்ள இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: 'ஆற்றில் வெள்ளம் வந்தால் பாலம் மூழ்கும்... நாங்கள் பள்ளிக்கு செல்வது எப்படி?' - மாணவர்கள் வேதனை