சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 10 மண்டலங்களிலிருந்து அரசுப்பள்ளி மாணவர்கள் 20 பேருடன், மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பங்கேற்ற 'காஃபி வித் கமிஷனர்' என்ற நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வில், மாணவர்களுடன் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கலந்துரையாடினார். அப்போது, மாணவர்களின் கல்வி, புதிய சிந்தனைகள், எதிர்காலக் கனவுகள் மற்றும் எவ்வாறு கல்வி கற்பது என்பன உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் குறித்து அவர் எடுத்துக்கூறினார். பின்னர், மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த ஆணையர், மாணவர்கள் தங்களது வீடுகள் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் எவ்வாறு சுகாதாரத்தை மேம்படுத்தவேண்டும் என்று அறிவுரைகள் வழங்கினார்.
ஐ.ஏ.எஸ் உள்ளிட்ட அனைத்து உயர் பதவிகளுக்கும் மாணவர்கள் தங்களை எவ்வாறு தயார் செய்துகொள்ள வேண்டும் எனவும் விளக்கினார். விவசாயம், மருத்துவம் குறித்தான மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கும் தெளிவான பதில்களை அவர்களுக்கு புரியும் வகையில் அவர் விளக்கிக் கூறினார். பள்ளிகளில் உள்ள குறைகளை சரிசெய்து தருவதாக உறுதியளித்த ஆணையர் பிரகாஷ், பெரும்பாலான மாணவர்கள் தாங்கள் விவசாய விஞ்ஞானிகளாக விரும்புவதாக கூறியதை வெகுவாக பாராட்டினார். இந்தச்சந்திப்பில் கலந்துகொண்ட மாணவ, மாணவியர் 'காஃபி வித் கமிஷனர்' நிகழ்ச்சி மிகவும் பயனுள்ளதாக இருந்ததாகவும், மிகுந்த மகிழ்ச்சியடைவதாகவும் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: ’நீங்க மட்டும்தான் இங்கிலீஸ் பேசுவீங்களா நாங்களும் பேசுவோம்’ - அரசுப் பள்ளி மாணவர்கள்