சென்னையில் கரோனா தொற்று நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இந்நிலையில், நேற்று (நவ. 28) 500 நபர்களுக்கும் கீழ் பாதிப்பு கண்டறியப்பட்டதால் குணமடைந்தோரின் விழுக்காடு அதிகரித்து வருகிறது. மேலும், கரோனா பரவலைத் தடுக்க கிருமிநாசினி தெளிப்பது, மக்களுக்கு முகக்கவசம் வழங்குவது, மருத்துவ முகாம்கள் அமைப்பது என மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, ஒரு தெருவில் ஒருவருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டால் முழு தெருவையும் முதலில் மாநகராட்சி அடைத்து கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்து வந்தது. இது மக்களுக்கு சிரமங்களை ஏற்படுத்தியதால் ஒரு தெருவில் மூன்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் தொற்று இருந்தால் மட்டுமே தெருவைக் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக மாநகராட்சி அறிவித்து வருகிறது.
இதையடுத்து, சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் குணமடைந்தோரின் விழுக்காடு நாள்தோறும் அதிகரித்து வருவதால் கட்டுப்பாட்டுப் பகுதிகளும் குறைந்து வந்தன. தற்போது அது பூஜ்ஜியமாக மாறி உள்ளது. ஏப்ரல், மே மாதத்தில் 500க்கும் மேற்பட்ட கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இருந்தது. தற்போது அது பூஜ்ஜியமாக மாறியது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் போதே டெங்கு தடுப்பதற்கும் மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போது வரைலும் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு சென்னையில் டெங்கு பாதிப்பு குறைவாக உள்ளது என மாநகராட்சி தரப்பு தெரிவிக்கின்றது.