கரோனா கண்டறிதல் சோதனைக்கு மாநகராட்சியால் அனுமதிக்கப்பட்ட தனியார் பரிசோதனை மையங்களின் பிரதிநிதிகளுடன் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தலைமையில் ஆலோசனை கூட்டம், மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள அம்மா வளாகத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆணையர் பிரகாஷ், " நாட்டிலேயே சென்னையில்தான் அதிகளவாக 5.70 லட்சம் ஆர்டிபிசிஆர் எனப்படும் கரோனா கண்டறிதல் சோதனைகள் செய்யப்பட்டுள்ளன. மார்ச், ஏப்ரல் ஆகிய முதல் 2 மாதங்களில் 1 லட்சம் பரிசோதனைகளும், அடுத்த 25 நாள்களில் 2 லட்சத்தைக் கடந்தும், அதற்கடுத்த 16 நாள்களில் 3 லட்சத்தைக் கடந்த பரிசோதனைகளும் செய்யப்பட்டுள்ளன.
அதனைத்தொடர்ந்து 10 நாள்களில் 4 லட்சத்தை தாண்டிய கரோனா சோதனைகள், அடுத்த 9 நாள்களில் 5 லட்சத்திற்கும் அதிகமாக செய்யப்பட்டுள்ளன. 1000 நபர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டால், மாநகராட்சி சார்பில் 10,000 பேருக்கு பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. அதாவது பரிசோதனைகளை 10 மடங்கு அதிகரித்துள்ளோம்.
மேலும், கரோனா கழிவுகளைப் பொருத்தவரை 1000 °F அளவில் மணலியில் உள்ள கிடங்கில் எரிக்கப்படுகின்றன. இதுவரை 330 டன் கரோனா கழிவுகள் எரிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். 3 அடுக்கு காட்டன் முகக்கவசம் அணிந்தாலே போதுமானது ” என்றார். மேலும், நடிகர் ரஜினிகாந்த் ஊரடங்கு காலத்தில் கேளம்பாக்கம் சென்றது குறித்த கேள்விக்கு பதிலளித்த ஆணையர் பிரகாஷ், ரஜினிகாந்த் இ-பாஸ் பெற்று அங்கு சென்றாரா என்பது குறித்து ஆய்வு செய்து வருவதாகத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: முகக்கவசத்தோடு ஊர்சுற்றும் ரஜினி - வைரலான புகைப்படம்