தொடர் மழை காரணமாக சேதமடைந்த சாலையையும், பழுதடைந்த மழைநீர் வடிகால்களையும் சீரமைக்க மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பாக சென்னை ரிப்பன் மாளிகையில் நேற்று (டிச.24) கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. ஆணையர் பிரகாஷ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
கடந்த மாதம் வங்கக் கடலில் உருவான நிவர், புரவி ஆகிய இருபுயல்கள் காரணமாக தமிழ்நாட்டின் கடற்கரையை ஒட்டிய மாவட்டங்கள் கடுமையாக பாதிப்பிற்குள்ளாகின. குறிப்பாக, ஒரேநாளில் தொடர்ந்து கனமழை பெய்ததால் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 23 இடங்கள் நீரால் சூழப்பட்டு வெள்ளக்காடாக காட்சியளித்தன.
இந்த 23 இடங்களிலும் மழை நீர் வடிகால் அமைத்து தண்ணீர் தேங்காத வண்ணம் நடவடிக்கை எடுக்க இந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. மழைநீர் வடி கால்வாய் அமைக்க உடனடியாக கள ஆய்வு மேற்கொள்ள வேண்டுமென அலுவலர்களுக்கு ஆணையர் உத்தரவிட்டதாக மாநகராட்சி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
இந்த கலந்தாய்வுக் கூட்டத்தில் துணை ஆணையர் மேகநாதன் ரெட்டி, வட்டார துணை ஆணையாளர்கள் ஆகாஷ், ஸ்ரீதர், ஆல்பி ஜான் வர்கீஷ், தலைமைப் பொறியாளர் நந்தகுமார் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க : 40 ஆண்டுகளாக பேருந்து வசதியின்றி தவித்த கிராமம்: புதிய பேருந்து வசதி ஏற்பாடு!