சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் மொத்தம் 281 பள்ளிகள் இயங்கி வருகின்றன. அவற்றில் மொத்தம் 1 லட்சத்து 13 ஆயிரம் மாணவ-மாணவியர் படிக்கின்றனர்.
சிங்காரச் சென்னை 2.O திட்டத்தின் கீழ், 23 பள்ளிகளின் கட்டமைப்பையும், CITIS (City Investments To Innovate and Sustain) என்னும் திட்டத்தின் கீழ், 28 பள்ளிகளின் கட்டமைப்பையும் மேம்படுத்த சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. அதற்கான முதற்கட்டப் பணிகள் தொடங்கிவிட்டது.
இன்டர்நெட் வசதியுடன் ஸ்மார்ட் வகுப்பறைகள், நவீன வசதிகளுடன் கூடிய ஆய்வகங்கள், விளையாட்டு மைதானங்கள், மாணவர்களின் பொது அறிவை வளர்க்கும் வகையில் ஓவியம் தீட்டப்பட்ட வகுப்பறைகள், சுகாதாரமான அதிக எண்ணிக்கையிலான கழிப்பறைகள் ஆகியவை இம்மேம்பாட்டு பணிகளுள் அடங்கும்.
சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் சுமார் 3,000 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். மேம்படுத்தப்படும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு புதிய வசதிகளை திறம்பட பயன்படுத்துவதற்குத் தனி பயிற்சியும் அளிக்கப்படும் என மாநகராட்சி அலுவலர்கள் கூறுகின்றனர்.
இந்தக் கல்வியாண்டின் தொடக்கத்தில் கரோனா பெருந்தோற்று ஏற்படுத்திய பொருளாதார பாதிப்புகளின் எதிரொலியாக அதிக என்ணிக்கையிலான மாணவர்கள் தனியார் பள்ளிகளிலிருந்து சென்னை மாநகராட்சிப் பள்ளிகளுக்கு இடம்பெயர்ந்ததைப் பார்க்க முடிந்தது.
புதிதாக சேர்ந்துள்ள மாணவர்களை தக்கவைத்துக் கொள்ளவும், மாணவர் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கவும் சென்னை மாநகராட்சி, தனது முயற்சிகளை தீவிரப்படுத்தியுள்ளது. கட்டமைப்பை மாற்றுவதற்கு அந்த அந்த பள்ளிகளுக்குத் தேவைக்கேற்ப நிதி ஒதுக்கி வருகிறது. இதன் அடிப்படையில் மண்டலம் 8 புள்ளா அவென்யூவில் ( Pulla Avenue) அமைந்து இருக்கும் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு 3 கோடியே 86 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அதேபோல் மண்டலம் 10 எம்ஜிஆர் நகரில் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளிக்கு ஒரு கோடியே 79 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும் மண்டலம் 6 மார்க்கெட் தெருவில் அமைந்து இருக்கும் மாநகராட்சிப் பெண்கள் மேல் நிலைப்பள்ளிக்கு ஒரு கோடியே 5 லட்சத்து 50ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதேபோல் கட்டமைப்பை மேம்படுத்தும் பள்ளிகளுக்கு நிதி ஒதுக்கப்படுகிறது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 7 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு? - அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்