தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டபோதிலும், கரோனா பெருந்தொற்றின் தாக்கம் குறையாமல் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. குறிப்பாக, சென்னையில் கரோனா பெருந்தொற்று தீவிரமடைந்து வருகிறது. குடிசைப்பகுதிகளில் இந்தப் பரவலைத் தடுக்க மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
சென்னையில் 1,979 குடிசைப் பகுதிகளில் சுமார் 25 லட்சம் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதிகளில் உள்ள மக்களுக்கு கரோனா வைரஸ் தடுப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், முகக் கவசம் அணிதல், அடிக்கடி சோப்பு கொண்டு கை கழுவுதல், தன்சுத்தம் ஆகியவை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும் தன்னார்வலர் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த குழுக்கள் மாநகராட்சியுடன் இணைந்து பணியாற்ற 2,500 களப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தக் களப்பணியாளர்கள் வரும் சனிக்கிழமை (24.05.2020) முதல் பணிகளில் ஈடுபடுவார்கள் என நேற்று (மே 20) அமைச்சர் எஸ்.பி. வேலுமணி அறிவித்தார்.
இந்த நிலையில், சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள அம்மா மாளிகையில் தன்னார்வலர் குழுக்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், கரோனா விழிப்புணர்வு பணியில் ஈடுபடப்போகும் தன்னார்வலர்களுக்கு பயிற்சி மற்றும் அறிவுரைகளை வழங்கினார்.
இதையும் படிங்க: கரோனா தடுப்பு பணிக்கு சிறப்பு அலுவலர்கள் நியமனம்!