சென்னையில் வட சென்னை, கோயம்பேடு பகுதியில் நோய்த்தொற்று அதிக அளவில் பரவிவருகிறது. குறிப்பாக கோயம்பேடு சந்தை சென்றவர்களின் மூலம் நோய்த்தொற்று தொடர்ந்து கடந்த ஒரு வாரமாக அதிகரித்துவருகிறது.
சென்னை மாநகராட்சி, மக்கள் நல்வாழ்வுத் துறை இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையால் நோய்த்தொற்று கட்டுக்குள் வராது என்பதை மத்தியக் குழு கண்டறிந்து அறிவுரை வழங்கி உள்ளதாகத் தெரிகிறது.
இதனைத் தொடர்ந்து பேரிடர் மேலாண்மை ஆணையர் ராதாகிருஷ்ணன் சிறப்பு அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் நியமிக்கப்பட்ட பிறகு கரோனாவை கட்டுப்படுத்துவதற்கு அதிரடியான திட்டத்தினை வகுத்துள்ளார். அதன்படி, பரிசோதனைகளை அதிகளவில் மேற்கொள்வது எனத் திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போது சென்னையில் உள்ள மருத்துவமனைகளில் 1100 நோயாளிகளுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கும் வகையில் தனி அறையுடன் கூடிய படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
அவற்றில் சுமார் 800-க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். இவர்களில் 90 விழுக்காட்டினருக்கு தீவிர சிகிச்சை தேவை இல்லை. அவர்களைத் தனிமைப்படுத்தி வைத்தால் மட்டுமே போதுமானது.
சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் 180 புதிய படுக்கை அறைகளைக் கொண்ட கரோனா வார்டு உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது 80 படுக்கையறைகள் தயாராக உள்ள நிலையில், அவசரநிலை கருதி 40-க்கும் மேற்பட்ட கரோனா நோய்த்தொற்று உடையவர்களை இடமாற்றம் செய்துவருகின்றனர்.
மேலும் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கான சென்னையில் சுமார் 50 ஆயிரம் படுக்கை வசதியுடன் கூடிய அறைகள் தயார்செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருவதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். 10 ஆயிரம் நபர்கள் தங்கவைப்பதற்கான பணிகள் விரைந்து நடைபெற்றுவருகிறது எனவும் அவர் கூறியுள்ளார்.
நோய்த்தொற்று அறிகுறியுடன் தீவிர சிகிச்சை தேவைப்படாமல் உள்ள 90 விழுக்காட்டினரை, சென்னையில் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் அமைக்கப்பட்டுள்ள கரோனா தடுப்பு மையங்களில் தங்கவைப்பதற்கு மக்கள் நல்வாழ்வுத் துறை திட்டமிட்டுள்ளது.
இதையும் படிங்க:சென்னையில் ஒரேநாளில் 174 பேருக்கு கரோனா பாதிப்பு!