சென்னை: கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு ஆய்வாளராகப் பணியாற்றி வந்த சாம் வின்சென்ட், சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு ஆய்வாளராக பணியாற்றி வந்த சரவணன் ஆகியோர் பாலியல் தொழில் புரியும் தரகர்களிடம் லஞ்சம் பெற்றதாக லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் (DVAC) வழக்குப்பதிவு செய்தனர்.
இதனையடுத்து, கீழ்ப்பாக்கம் காவலர் குடியிருப்பில் உள்ள சாம் வின்சென்ட் வீடு, புழுதிவாக்கத்தில் உள்ள சரவணன் வீடு ஆகியவற்றில் லஞ்ச ஒழிப்பு காவலர்கள் நேற்று (நவ. 16) திடீர் சோதனை மேற்கொண்டனர்.
வீடுகளில் ரெய்டு
சுமார் ஐந்து மணி நேரமாக நடைபெற்ற இந்த சோதனையில் சாம் வின்சென்ட் வீட்டிலிருந்து வழக்கிற்கு தொடர்புடைய 17 முக்கிய ஆவணங்களும், சரவணன் வீட்டிலிருந்து 8 முக்கிய ஆவணங்கள், 18.5 லட்சம் நிரந்தர வைப்புத் தொகை மற்றும் 21 லட்சம் ரூபாய் பணம் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில், இரு காவல் ஆய்வாளர்களும் தரகர்களிடம் லஞ்ச ஒழிப்பு காவல்துறையிடம் சிக்கியது எப்படி என முதல் தகவல் அறிக்கை மூலம் அம்பலமாகி உள்ளது.
கடந்த 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரை சென்னை காவல்துறை பாலியல் தொழில் தடுப்புப்பிரிவில் காவல் ஆய்வாளராக சாம் வின்சென்ட், சரவணன் பணியாற்றினர்.
அப்போது, பாலியல் தொழில் தரகர்கள், மசாஜ் பார்லரில் பாலியல் தொழில் நடத்தும் உரிமையாளர்களிடம் இருந்து லஞ்சம் பெற்றுகொண்டு சென்னையில் தடையின்றி பாலியல் தொழில் நடப்பதற்கு அனுமதி அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
தரகர்களுடன் கைகோர்த்த காவலர்கள்
இதுதொடர்பாக, ராயப்பேட்டையைச் சேர்ந்த அக்பர் அகமது என்பவர் லஞ்ச ஒழிப்பு காவல்துறையிடம் புகார் ஒன்றை அளித்தார்.
அதில், "சென்னையில் பாலியல் தொழிலில் ஈடுபட்டு பல்வேறு குற்ற வழக்குகளில் சிக்கிய முக்கியத் தரகர்களான பூங்கா வெங்கடேசன், டெய்லர் ரவி ஆகிய இரண்டு பேரிடமும் லட்சக்கணக்கில் காவல் ஆய்வாளர் சாம் வின்சென்ட், சரவணன் ஆகியோர் லஞ்சம் பெற்றுக்கொண்டு பாலியல் தொழில் நடத்த அனுமதித்துள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி குறிப்பிட்டிருந்தார்.
இந்தப் புகாரைத் தொடர்ந்து, லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் நடத்திய விசாரணையில், சென்னையில் பல வருடங்களாக பூங்கா வெங்கடேசன், டெய்லர் ரவி ஆகியோர் பாலியல் தொழில் நடத்தி வந்ததாகவும், வழக்குப்பதிவு செய்தும் பல வருடங்களாக இருவரும் தலைமறைவாக இருந்து வருவதாகவும் காவல்துறையினரால் கூறப்பட்டு வந்தது.
ஆனால், இரு தரகர்களும் தலைமறைவாக இருப்பதற்கு காவலர்கள் சாம் வின்சென்ட், சரவணன் ஆகியோர் உதவியதை புலனாய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.
குறிப்பாக, இரு காவல் ஆய்வாளர்களின் தொலைபேசி அழைப்புகளை ஆய்வு செய்தபோது இரண்டு தரகர்களிடம் தொடர்ந்து தொடர்பிலேயே இருந்து வந்ததும் தெரியவந்தது.
லஞ்சம் பெறவும் போட்டி
தொலைபேசி அழைப்பு மூலமாக இரு காவல் ஆய்வாளர்களும் சிக்கியது அம்பலமானது. மேலும், டெய்லர் ரவி, பூங்கா வெங்கடேசன் ஆகிய இருவர் மீதும் ஒரு வழக்குக் கூட காவல் ஆய்வாளர் வின்சென்ட் பதிவு செய்யாமல் இருந்ததாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், சென்னை நகரில் அதிகமாகவும், புறநகரில் குறைவாகவும் தரகர்களிடமிருந்து லஞ்சம் கிடைப்பதால் சென்னை நகரை கைப்பற்ற காவலர்கள் சாம் வின்சென்ட், சரவணன் ஆகியோர் இடையே போட்டி நிலவிவந்துள்ளது. மேலும், பணத்தைப் பிரிப்பதிலும் இருவருக்கும் மோதல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதனால், இரு காவல் ஆய்வாளர்களும் சென்னை நகரைக் கைப்பற்ற மாறி மாறி அப்போது ஆட்சியிலிருந்த அமைச்சரிடம் சிபாரிசுக்கு சென்றதாகவும் கூறப்படுகிறது.
பணியிடை நீக்கம்
இந்த குற்றச்சாட்டுக்கு ஆளான இருவர் மீதும் துறைரீதியான விசாரணை நடத்தி அப்போதைய காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டார்.
இதுதொடர்பாக, லஞ்ச ஒழிப்பு காவலர்கள் ஊழல் தடுப்புச்சட்டத்தின்கீழ் வழக்குபதிவு செய்து பாலியல் தொழில் தடுப்பு பிரிவுக்கு வருவதற்கு முன்பாக வைத்திருந்த சொத்து விவரத்தையும், அதன் பிறகு சேர்த்த சொத்து விவரத்தையும் வைத்து விசாரணை நடத்தத் திட்டமிட்டனர். அதனடிப்படையில் நேற்று காலை காவலர்கள் சாம் வின்சென்ட், சரவணன் ஆகியோர் வீடுகளில் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: குழந்தைகளை வைத்து ஆபாசப் படங்கள் - குற்றவாளிகளுக்கு வலைவீசும் சிபிஐ