சென்னை அண்ணா நகரில் உள்ள தனியார் கல்லூரியில் ’காவலன்’ செயலி குறித்த விழிப்புணர்வை பெண்களுக்கு ஏற்படுத்தும் நிகழ்வில் காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். இதில் கூடுதல் ஆணையர் தினகரன், இணை ஆணையர் விஜயகுமாரி ஆகியோரும் கலந்துகொண்டனர்.
பின்னர் அங்கு உரையாற்றிய கூடுதல் ஆணையர் தினகரன், ”பெண்கள், குழந்தைகளுக்கான பாதுகாப்பை பலப்படுத்தவே காவலன் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தெலங்கானாவில் பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்த நபர்களை காவல் துறையினர் என்கவுன்டர் செய்தனர்.
இதேபோல், சென்னையில் அயனாவரம் மாற்றுத்திறனாளி சிறுமி பாலியல் வழக்கு குற்றவாளிகளுக்கும் காவல் துறை தகுந்த தண்டனையைப் பெற்று தந்திருக்கிறது. பெண்களின் பாதுகாப்பில் காவல் துறை மிகுந்த அக்கறை கொண்டுள்ளது. இதனால்தான் காவலன் செயலி குறித்து பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திவருகிறோம்“ எனத் தெரிவித்தார்.
சென்னை காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் பேசும்போது, ”பெண்கள், குழந்தைளுக்காக ஏற்கனவே 35 காவல் நிலையங்கள் தனியாக செயல்பட்டுவருகின்றன. அதோடு, பெண்களின் பாதுகாப்புக்காக காவலன் செயலி கடந்த ஓராண்டிற்கு முன்பாக அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளது.
ஆனாலும் இச்செயலி பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறது. அதனால்தான் காவலன் செயலி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுவருகின்றன. இந்தச் செயலியை பெண்கள் எந்த இக்கட்டான நேரங்களிலும் பயன்படுத்தலாம். நெட்வொர்க் இல்லாத சமயத்திலும் ஜிபிஆர்எஸ் உதவியோடு நிகழ்விடத்திற்கு காவல் துறை உடனடியாக வந்து உதவிபுரியும்.
இந்தக் காவலன் செயலியில் பாதுகாப்பு குறித்தான வேறு மாற்றங்கள் ஏதும் செய்ய விரும்பினால் பெண்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்கலாம். பெண்கள் செல்லக்கூடிய வீதிகளில் தெருவிளக்கு இல்லாமல் இருந்தாலும் புகார் தெரிவிக்கலாம்“ என்று கூறினார்.
இதையும் படிங்க: பெண்களைக் காக்க வருகிறது 'காவலன் SOS' செயலி!