சென்னை: வேப்பேரி பிர்தாபெட் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் அக்சல் சந்த். இவர் எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் தனது மகன் அபிஷேக் பணத்திற்காகக் கடத்தப்பட்டு மும்பையில் வைக்கப்பட்டுள்ளதாகப் புகார் அளித்துள்ளார்.
இது தொடர்பாக எழும்பூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் அபிஷேக் தன் நண்பர்களான விஜய், சுரேஷ், அஸ்வின் ஜெயின், கமல், சிக்கந்தர் பட்டேல் ஆகியோரிடம் ஒரு கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆன்லைன் சூதாட்டம்
அவ்வாறு வாங்கிய கடனையும் ஆன்லைன் சூதாட்டம் உள்ளிட்ட தவறான வழியில் செலவழித்ததாகத் தெரியவந்துள்ளது. இதனால் பணம் கொடுத்த நண்பர்கள் அபிஷேக்கிடம் பணத்தைத் திருப்பிக் கேட்டுள்ளனர்.
நீண்ட நாள்களாகப் பணத்தைத் தராததால் எழும்பூர் தனியார் நட்சத்திர உணவகத்தில் அருகே வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். பணத்தைத் தராததால் அபிஷேக்கை கடந்த மாதம் நண்பர்கள் கடத்திச் சென்றதாக தந்தை அக்சல் சந்த் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கடத்தியதாகக் கூறப்படும் அபிஷேக்கின் நண்பர்களிடம் காவல் துறையினர் விசாரணை செய்ததில், அவர்கள் பணத்தை அபிஷேக் தந்தையிடம் கேட்டதாகவும், பணத்தைத் தராமல் மகனை அழைத்துச் சென்று கேட்டுக்கொள்ளும்படி கூறியதாகத் தெரிவித்துள்ளனர்.
நீடிக்கும் குழப்பம்
இதனால் அபிஷேக்கை நண்பர்கள் மும்பைக்கு அழைத்துச் சென்றுள்ளதாகத் தெரிவித்தனர். அபிஷேக்கிடம் காவல் துறையினர் தொலைபேசி மூலம் பேசியதில், தந்தை தான் வாங்கிய கடனைத் தராததால், கடன் கொடுத்த நண்பர்களோடு மும்பை வந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் ஒரு மாத காலமாக அபிஷேக் மும்பையிலேயே இருப்பது காவல் துறையினருக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடத்தியவர்கள் மிரட்டி வைத்துள்ளனரா என விசாரணை நடத்திவருகின்றனர். மும்பையிலிருந்து அபிஷேக்கை மீட்க நடவடிக்கை மேற்கொண்டுவருவதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
அபிஷேக் உண்மையில் கடத்தப்பட்டாரா அல்லது வாங்கிய பணத்தைத் திருப்பிக் கொடுக்க முடியாமல் தந்தை, மகன் கடத்தல் நாடகம் நடத்துகின்றனரா? என்ற கோணத்திலும் தொடர்ந்து எழும்பூர் காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: போலி கால் சென்டர் நடத்திய கும்பல் கைது