சென்னை: சிந்தாதிரிப்பேட்டையில் நேற்று முந்தினம் (மே. 24) பாஜக பிரமுகர் பாலச்சந்தரை ஒரு கும்பல் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியோடியது. பிரதமர் மோடி சென்னைக்கு வர உள்ள நிலையில் பாஜக பிரமுகர் வெட்டி படுகொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனையடுத்து நான்கு தனிப்படை அமைத்து போலீசார் கொலையாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். மேலும் பாலச்சந்தரின் உறவினர்கள் கடையில் துணி வாங்கிவிட்டு பணம் தராமலும், மாமூல் கேட்டு ரவுடி பிரதீப் மிரட்டியுள்ளார். பாலச்சந்தர் தட்டிக்கேட்டு காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததால் பழிவாங்கவே கொலை செய்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
பாலச்சந்தரின் பாதுகாப்பு காவலர் பாலமுருகன் கொலை நடந்த போது உடனில்லாமல் இருந்ததால் அவரை சஸ்பெண்ட் செய்து காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். இந்நிலையில் செல்போன் எண்ணை வைத்து தனிப்படை போலீசார் தீவிரமாக தேடியதில், சேலம் எடப்பாடி பகுதியில் கொலையாளிகள் பதுங்கி இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து கொலை செய்துவிட்டு தலைமறைவாக இருந்து வந்த நான்கு பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். சரித்திர பதிவேடு குற்றவாளிகளான பிரதீப், சஞ்சய், கலை மற்றும் இவர்களை தங்க வைத்திருந்த ஜோதி என்பது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் போலீசார் சென்னைக்கு அழைத்து வரும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வழக்கில் மேலும் யாராவது தலைமறைவாக உள்ளனரா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: அதிமுக கவுன்சிலரை கடத்தி சென்றதாக பதிவு செய்யப்பட்ட வழக்கு முடித்து வைப்பு!