வானியலில் அரிய நிகழ்வான வளை சூரிய கிரகணம் இன்று காலை நிகழ்ந்தது. இந்தக் கிரகணத்தை காண தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சென்னையில் உள்ள பிர்லா கோளரங்கத்தில் இதற்காக சிறப்பு தொலைநோக்கிகள், சிறப்புக் கண்ணாடிகள் உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இந்த அரியவகை சூரிய கிரகணம் குறித்து பிர்லா கோளரங்க மூத்த அறிவியலாளர் லெனின் தமிழ்கோவன் நமது ஈடிவி பாரத்திற்கு அளித்த சிறப்புப் பேட்டியில்,
” பூமிக்கும் சூரியனுக்கும் இடையே நிலவு வருவதால் கிரகணம் ஏற்படுகிறது. நிலவு சூரியனை முழுவதும் மறைக்காமல் சூரியனுக்கு பொட்டு வைத்தது போல மையப்பகுதி மட்டும் மறைக்கப்பட்டிருக்கும். இதனால் சூரியனின் விளிம்புகள் தீ வளையம் போல் காட்சி தரும். இதுவே வளைய வடிவ சூரிய கிரகணம் அல்லது கங்கண சூரிய கிரகணம்.
தமிழ்நாட்டின் மற்றப் பகுதிகளில் பகுதியாகத் தெரிந்த இந்தக் கிரகணம், கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, திருப்பூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை உள்ளிட்டப் பகுதிகளில் தெளிவாகத் தெரிந்தது. சென்னையில் உள்ள பிர்லா கோளரங்கத்தில் இக்கிரகணத்தைப் பார்க்க தொலைநோக்கிகள், சிறப்புக் கண்ணாடிகள், திரையிடல் ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. சுமார் 4 ஆயிரம் பேர் வரை இந்த கிரகணத்தை கண்டு மகிழ்ந்தனர். இதற்குப் பிறகு இந்த வளைய சூரியக் கிரகணமானது 2031ஆம் ஆண்டில்தான் தமிழ்நாட்டில் நிகழும்.
சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் நிலவு வரும்போது நிலவின் நிழல் பூமியின்மீது விழுந்து சூரியன் மறைக்கப்படும், இந்த நிகழ்வே சூரிய கிரகணம். நிலவின் நிழல் நம் மீது பட்டால் ஒன்றும் ஆகாது. ஆகையால் பொதுமக்கள் பயப்படத் தேவையில்லை. உணவு கெட்டுப்போதல், கர்ப்பிணித் தாய்மார்கள் வெளியே வரக்கூடாது ஆகியவையெல்லாம் வெறும் மூடநம்பிக்கை. இவ்வாறானவற்றை பொய்பிப்பதற்காகவே இங்கு வந்தவர்களுக்கு கிரகணத்தின் போது தின்பண்டங்கள் கொடுத்து உண்ணவைத்தோம்“ என்று கூறினார்.
இதையும் படிங்க: நீல வானை செக்கச் சிவக்க வைக்கும் சூரிய கிரகணம்: தெரிந்து கொள்வோம்!