கோடைக் காலத்தில் சென்னை புறநகர் பகுதியில் வாழும் மக்கள் தண்ணீருக்காக தத்தளிப்பது வழக்கமாக இருந்துவருகிறது. குறிப்பாக, பல்லாவரம் பகுதிகளில் இருக்கும் மக்கள் தண்ணீர் தட்டுப்பாட்டால் அதிகளவு பாதிப்புக்குள்ளாகின்றனர்.
இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் தண்ணீர் பிரச்னையைத் தீர்க்க நீர்த்தேக்கத் தொட்டி கட்டினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று பல்லாவரம் நகராட்சியிடம் கோரிக்கை வைத்தனர். இதனையேற்ற அரசு, பழைய பல்லாவரத்தை அடுத்த கொளத்துமேடு பகுதியில் ஐந்து கோடி ரூபாய் மதிப்பில் 16 லட்சம் நீர் கொள்ளளவு கொண்ட இரண்டு மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிக்கள் கட்டப்பட்டன.
ஆனால் கட்டி முடித்து பல மாதங்கள் கடந்தும் இதுவரை பயன்பாட்டுக்கு வராமல் வெறும் காட்சிப் பொருளாகவே உள்ளது. கட்டி முடித்த நீர்த்தேக்கத் தொட்டியில் தண்ணீர் நிரப்பி விநியோகம் செய்ய வேண்டும் என அப்பகுதியினர் பல்லாவரம் நகராட்சியிடம் மீண்டும் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், தங்கள் பகுதியில் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்துவருவதாகவும், கோடைக்காலங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பள்ளி, கல்லூரிகளிகளுக்குச் செல்லும் மாணவர்கள், வேலைக்குச் செல்வோர் என அனைவரும் பாதிக்கப்படுவதாகவும் வேதனை தெரிவித்தனர்.
தற்போது கோடைக்காலம் வருவதற்கு முன் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் தண்ணீர் நிரப்பி பயன்பாட்டிற்குக் கொண்டுவந்தால் தங்களின் தண்ணீர் பிரச்னை தீரும் என்கின்றனர். இதற்குக் காரணமாக தேர்தல் நடைபெறாமல் இருப்பதைக் கூறும் மக்கள், தேர்தல் நடந்து உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால், அவர்கள் மூலம் மக்களுக்கான பிரச்னை விரைவில் தீர்க்கப்பட்டிருக்கும் எனவும் கூறியுள்ளனர்.
இதையும் படிங்க: கோதாவரியில் இருந்து கடைமடைக்கு விரைவில் உபரி நீர் - நிதின் கட்கரி