சென்னை விமான நிலையத்தில் முக்கிய பண்டிகைகள் கொண்டாடப்படுவது வழக்கமான ஒன்று. அந்த வகையில் நாளை கொண்டாடப்படவுள்ள பொங்கல் திருநாளை முன்னிட்டு விமான நிலையம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
அதன்படி அங்குள்ள உள்நாட்டு முனையத்தின் வருகை பகுதியில் தமிழர்களின் திருவிழாவான பொங்கல் பண்டிகையை சிறப்பிக்கும் வகையில் பொங்கல் பானை வைக்கப்பட்டுள்ளது. இந்த பானையின் அருகே கரும்புகள், பழ வகைகள் உள்ளிட்டவைகளையும் வைத்து அலங்கரித்துள்ளனர்.
இது தமிழர்களின் கலாசாரத்தை விளக்கும் வகையில் கிராமப்புறங்களில் வீடுகளில் மாடுகளைக் கட்டி கரும்புகள் வைத்து பானையில் பொங்கல் கொண்டாடப்படுவது போல் அலங்காரமும், ஜல்லிக்கட்டு காளையை அடுக்குவது போன்ற அலங்காரமும் செய்யப்பட்டுள்ளன.
இதனை விமான நிலையத்திற்கு வரும் பயணிகள், அவர்களை வரவேற்க வருபவர்கள் என அனைவரும் வியப்புடன் கண்டு ரசிப்பதோடு புகைப்படங்களும் எடுத்துச் செல்கின்றனர். மேலும் விமான நிலையம் முழுவதும் பாதுகாப்பு போடப்பட்டு மத்திய தொழிற்படை வீரர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.