சென்னை: கரோனா வைரஸ் முதல் அலை வேகமாகப் பரவியதையடுத்து சென்னை உள்ளிட்ட நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் 2020 மாா்ச் 25ஆம் தேதியிலிருந்து பயணிகள் விமான போக்குவரத்திற்கு மத்திய அரசு தடைவிதித்தது.
சரக்கு விமானங்கள் போக்குவரத்திற்கு மத்திய அரசு அனுமதித்திருந்தது. ஆனாலும் சரக்கு விமான சேவைகள் மிகவும் குறைந்த அளவே இயக்கப்பட்டதோடு, சரக்குகளை ஏற்றி இறக்கும் ஊழியா்களும் மிகவும் குறைவானவா்களே பணிக்கு வந்ததால், சரக்குகளைக் கையாளுவது மிகவும் குறைவாகவே இருந்தது.
சரக்கு ஊழியர்களின் சாதனை
இந்நிலையில் கரோனா வைரஸ் இரண்டாம் அலை நேரத்தில் சென்னை விமான நிலைய சரக்ககத்தில் சரக்கு விமானங்களின் வருகையும், சரக்குகளைக் கையாளுவதும் பல மடங்கு அதிகரித்தது.
இந்த ஆண்டு பிப்ரவரி 18ஆம் தேதியிலிருந்து டிசம்பா் 20ஆம் தேதி வரையிலான 10 மாதங்களில் மொத்தம் ஐந்தாயிரம் விமானங்களின் சரக்குகளை சென்னை விமான நிலைய சரக்கு ஊழியர்கள் கையாண்டு சாதனை படைத்துள்ளனர்.
கரோனா வைரஸ் இரண்டாம் அலை உச்சக்கட்டத்திலிருந்த ஏப்ரல், மே, ஜூன், ஜூலை மாதங்களில் வெளிநாடுகளிலிருந்து பெருமளவு வந்த மருத்துவ உபகரணங்களான ஆக்சிஜன் செரியூட்டிகள், ஆக்சிஜன் உருளைகள், வென்டிலேட்டா்கள், தெர்மல் ஸ்கேனர்கள், முகக்கவசங்கள், கிருமிநாசினி மருந்துகள் உள்ளிட்ட பல்வேறுவிதமான மருத்துவ உபகரணங்கள் சரக்கு விமானங்கள் மற்றும் இந்திய ராணுவ விமானங்கள், ஹெலிகாப்டா்களில் தொடா்ச்சியாக வந்தன.
அவற்றை விமான நிலைய சரக்கு ஊழியர்களை உடனடியாக விமானங்களிலிருந்து இறக்கி, காலதாமதமின்றி விரைந்து டெலிவரி செய்துவந்தனர்.
ஊரடங்கிலும் ஓயாது உழைத்த ஊழியர்கள்
அதைப்போல் கரோனா தடுப்பூசி மருந்துகள் சரக்கு பார்சல்களாகத் தொடா்ந்து தற்போது வரை விமானங்களில் வந்துகொண்டிருக்கின்றன. மேலும் கத்தார், துபாய், ஹாங்காங் உள்ளிட்ட பல நாடுகளிலிருந்து வழக்கமாக வரும் சரக்குகளும் பெருமளவு வந்துகொண்டிருக்கின்றன.
கரோனா வைரஸ் இரண்டாம் அலை ஊரடங்கால் ஊரே முடங்கிக்கிடந்த இந்த நேரத்திலும் சென்னை விமான நிலைய சரக்குப்பிரிவு இடைவிடாமல் தொடா்ந்து பணியாற்றி 10 மாதங்களில் ஐந்தாயிரம் விமானங்களின் சரக்குகளை ஏற்றி - இறக்கி கையாண்ட சாதனையை சென்னை விமான நிலைய சரக்ககப்பிரிவு ஊழியர்கள் மகிழ்ச்சியுடன் கேக் வெட்டி கொண்டாடினார்கள்.
சாதனையைக் கொண்டாடிய ஊழியர்கள்
அத்தோடு ஐந்தாயிரத்தைக் குறிக்கும்விதத்தில் அணிவகுத்து நின்று மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
சென்னை விமான நிலைய சரக்கக ஊழியர்கள் இதைப்போல் தொடா்ந்து மேலும் சிறப்பாகச் செயல்பட்டு சாதணைகளைப் படைக்க வேண்டும் என்று விமான நிலைய அலுவலர்கள் வாழ்த்திப் பாராட்டினர்.
இதையும் படிங்க: 2 மாதங்களுக்குப் பிறகு உதகை ரயில் சேவை தொடக்கம்