சென்னை: இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "வங்க கடலில் உருவாகி உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, தெற்கு ஒடிசா நோக்கி நகர உள்ளது. இதன் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் செப் 13, 14, 15ஆம் தேதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
இன்று (செப். 11) மன்னார் வளைகுடா, தென் தமிழ்நாடு கடலோரப்பகுதிகள் மற்றும் இலங்கை கடற்கரை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
கேரள - கர்நாடக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடல்பகுதிகள், மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் ஆந்திர கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
செப் 12ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் இலங்கை கடற்கரை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். ஆகவே மேற்கூறிய நாட்களில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சென்னை விமான நிலையத்தில் பயணியிடம் செல்போன் திருடியவர் கைது