விருதுநகர் மாவட்டம், திருச்சுழி தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் திருப்பதி என்பவர் தாக்கல்செய்த மனுவில்,
'திருச்சுழி தொகுதியில், திமுக சார்பில் போட்டியிடும் தங்கம் தென்னரசு, கடந்த 19ஆம் தேதி காரைப்பட்டி தாலுகாவிற்குட்பட்ட அவியூர் கிராமத்தில் வாக்களர்களுக்குப் பரிசுப் பொருள்கள், சில்வர் பாத்திரங்கள், பொங்கல் பரிசுப் பொருள்கள் உள்ளிட்டப் பொருள்களை’ வழங்கியதாகத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக புகைப்படத்துடன் தொகுதி தேர்தல் அலுவலரிடம் புகாரளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் பரிசுப் பொருள்கள் வழங்குவதைத் தடுக்கவும், தேர்தல் அலுவலர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் மனுவில் தெரிவித்துள்ளார்.
திருச்சுழி தேர்தல் அலுவலரும், தங்கம் தென்னரசுக்குச் சாதகமாக செயல்படுவதாகவும், தேர்தல் நடத்தை விதிமுறைகள் வெறும் காகிதம் அளவில் மட்டுமே உள்ளதாகவும் கூறியுள்ளார்.
திருச்சுழி தொகுதி தேர்தலை ரத்து செய்வதுடன், திமுக வேட்பாளர் தங்கம் தென்னரசுவை தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து தகுதி நீக்கம்செய்ய உத்தரவிட வேண்டும்' எனவும் மனுவில் கோரியுள்ளார்.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.