சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த வழக்கறிஞர் ஸ்டாலின் ராஜா என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நலன் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், "கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பொது இடங்களில் மக்கள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என்றும் கைகளை அடிக்கடி கழுவ வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது.
முகக் கவசங்களும், கைகளைக் கழுவ பயன்படுத்தப்படும் கிருமி நாசினிகளும் அத்தியாவசியப் பொருளாக மாறியுள்ள நிலையில், முகக் கவசங்களுக்கு 18 விழுக்காடு ஜிஎஸ்டி வரியும், சானிடைசர்களுக்கு ஐந்து விழுக்காடு ஜிஎஸ்டி வரியும் வசூலிக்கப்பட்டு வருகிறது.
கரோனா தொற்றுலிருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ள மக்கள் கடுமையாக போராடி வரும் நிலையில், முகக் கவசம், கிருமி நாசினிக்கு விதிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும்" என அந்த மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், நிர்மல்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் காணொலி மூலம் இன்று விசாரணைக்கு வந்தபோது, மனு தொடர்பாக இரண்டு வாரங்களில் மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.