தமிழகம் முழுவதும் ஏழை எளிய மக்களுக்கு விரைந்து மருத்துவ சேவை கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், 2,000 மினி கிளினிக்குகள் தொடங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து, கடந்த டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அதற்கான அரசாணை வெளியிடப்பட்டு, தற்போது அம்மா கிளினிக்குகள் பகுதி வாரியாக தொடங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மருந்தாளுநர்களை நியமிக்காமல், அம்மா மினி கிளினிக்குகளை திறக்க தடை விதிக்கக் கோரி, சென்னையை சேர்ந்த வசந்த் குமார், கார்த்திக் என்ற இரு மருந்தாளுநர்கள் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
அந்த மனுவில், ”1948 பார்மஸி சட்டப்படி மருத்துவர் பரிந்துரை அடிப்படையில் மருந்தாளுநர்கள் மட்டுமே மருந்துகளை விநியோகிக்க தகுதி பெற்றவர்கள். ஆனால் தமிழக அரசு அமைத்துள்ள மினி கிளினிக்கில் ஒரு மருத்துவர், செவிலியர், சுகாதாரப் பணியாளர் மட்டுமே இடம் பெற்றுள்ளனர்.
ஆயிரக்கணக்கானோர் மருந்தாளுநர்களுக்கான படிப்பை முடித்து வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் நிலையில், செவிலியரை வைத்து மருந்து விநியோகிப்பது சட்டப்படி தவறு என்பதால், 2,000 மினி கிளினிக்குகளிலும் மருந்தாளுநர் பணியிடத்தை உருவாக்க உத்தரவிட வேண்டும்” எனக் கோரியுள்ளனர்.
இந்த வழக்கு நீதிபதி வைத்தியநாதன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், பார்மஸி சட்டப்படி மருத்துவர்களோ, மருந்தாளுநர்களோ மருந்து வழங்க விதி உள்ளதாகவும், மினி கிளினிக்குகளில் மருத்துவர்களே நேரடியாக மருந்து வழங்குவார்கள் எனவும் விளக்கினார்.
இடத்தின் பரப்பளவு குறைவு என்பதால் தனி மனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டிய அவசியம் உள்ளதாகவும், அதன் காரணமாக பணியிடங்களை அதிகரிக்க முடியாது எனவும் தெரிவித்தார். அரசு தரப்பு வாதத்தை பதிவு செய்து கொண்ட நீதிபதி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: பணியிலிருந்து விடுவிக்கப்பட்டார் சகாயம்!