சென்னை: நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட மதிமுக, மனிதநேய மக்கள் கட்சி, கொங்குமக்கள் தேசிய கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சிகளைச் சேர்ந்த சின்னப்பா, பூமி நாதன், சதன் திருமலை குமார், ராகுராமன், அப்துல் சமத், ஜவாஹிருல்லா, ஈஸ்வரன், வேல்முருகன் ஆகியோர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர்.
திமுக சின்னமான உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இந்த எட்டு சட்டப்பேரவை உறுப்பினர்களையும் எதிர்க்கட்சியாக கருதக் கூடாது என உத்தரவிடக் கோரி கோயம்புத்தூரைச் சேர்ந்த லோகநாதன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இது குறித்து அவர் தாக்கல் செய்த மனுவில், “திமுக சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எட்டு சட்டப்பேரவை உறுப்பினர்களையும் எப்படி எதிர்க்கட்சி உறுப்பினர்களாக கருத முடியும்.
தனி இருக்கை வழங்க கூடாது
இது ஜனநாயாகத்தை கேலி கூத்தாக்கும் செயல். சட்டப்பேரவையில் பிரதிநிதித்துவம் இல்லாத கட்சிகளை சட்டப்பேரவை அனைத்து கட்சி கூட்டங்களுக்கு அழைக்கக் கூடாது.
இந்த சட்டப்பேரவை உறுப்பினர்களை எதிர்க்கட்சியாக கருதி, சட்டப்பேரவையில் தனி இருக்கை வழங்கக்கூடாது. சட்டப்பேரவையில் பேச தனியாக நேரம் ஒதுக்கக்கூடாது” எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: மீன்பிடிக்கும் போது சிறைப் பிடிக்கப்படும் மீனவர்கள் குடும்பத்திற்கான தின உதவித் திட்டம் தொடரும்!