சென்னை: தென்னாப்பிரிக்காவில் முதல் முறையாக கண்டறியப்பட்ட 'ஒமைக்ரான்' வைரஸ் இந்தியாவிலும் வேகமாகப் பரவி வருகிறது. கர்நாடகாவில் கடந்த 2ஆம் தேதி ஒமைக்ரான் பாதிப்பு தெரியவந்தது. அதன்பிறகு மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி, தமிழ்நாடு உள்பட 17 மாநிலங்களில் பரவியது.
ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி சமீபத்தில் ஆலோசனை நடத்தினார். அப்போது, ஒமைக்ரான் பாதிப்பு அதிகமாக உள்ள மாநிலங்களுக்கு பன்னோக்கு குழுக்களை அனுப்பி வைப்பதாக கூறினார். அதன்படி, தமிழ்நாடு உள்பட பத்து மாநிலங்களுக்கு மத்திய குழு வருகிறது.
4 பன்னோக்கு மருத்துவர்கள்
கேரளா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, மேற்கு வங்கம், மிசோரம், கர்நாடகா, பீகார், உத்தரப் பிரதேசம், ஜார்க்கண்ட், பஞ்சாப் மாநிலங்களுக்கு செல்லும் இந்த குழு, ஒமைக்ரான் கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசனைகளை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டுக்கு வரும் குழுவில் மத்திய சுகாதாரத்துறையைச் சேர்ந்த வல்லுநர்கள் டாக்டர் வினிதா, டாக்டர் புர்பசா, டாக்டர் சந்தோஷ்குமார், டாக்டர் தினேஷ்பாபு ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
3 நாள் பயணம்
மத்தியக் குழுவில் இடம் பெற்றவர்கள் சென்னை விமான நிலையத்திற்கு வருகை தந்தனர். இந்த குழுவினர், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று ஆய்வு நடத்த உள்ளனர்.
தமிழ்நாட்டில் மூன்று நாள்கள் வரை தங்கியிருந்து மாநில சுகாதார அதிகாரிகளுடன் இணைந்து ஒமைக்ரான், கரோனா தொற்றை கட்டுப்படுத்துவது தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை வழங்குவார்கள்.
ஒமைக்ரான் பாதித்தவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறை, பரிசோதனைகள், வெண்டிலேட்டர் வசதிகள், மருத்துவ ஆக்ஸிஜன் ஆகியவற்றின் இருப்புகள் உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்பு வசதிகளைக் கண்டறிந்து ஆய்வு செய்து மத்திய அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளனர்.
இதையும் படிங்க: எம்.டி.(ஓமியோபதி) மருத்துவப் பட்ட மேற்படிப்பு 28 ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்..!