சென்னை: ராஜிவ் கொலை வழக்கு ஆயுள் கைதி முருகன், வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள உயர் பாதுகாப்பு பகுதியில் கடந்த 2019ஆம் ஆண்டு திடீர் சோதனை நடத்திய போது, அவரிடம் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுதொடர்பாக சிறை கண்காணிப்பாளர் அளித்த புகாரின் அடிப்படையில் பாகாயம் போலீசார், முருகனுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி முருகன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
அதில், சிறைக்குள் செல்போன் வைத்திருப்பது சிறை குற்றம் என்பதால் அதில் சிறை கண்காணிப்பாளர் தான் தண்டனையை முடிவு செய்ய வேண்டும் என்ற அடிப்படையில், தனக்கு முன்று மாதங்கள் தண்டனை விதிக்கப்பட்டு விட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி மனைவி நளினி உள்ளிட்ட உறவினர்களை சந்திக்க முடியாது என்ற தண்டனையை அனுபவித்து விட்டதால், வேலூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை ரத்து செய்ய வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த மனு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, முருகன் தரப்பில் ஒரு குற்றத்திற்காக இரு முறை தண்டனை வழங்க முடியாது என தெரிவிக்கப்பட்டதை ஏற்ற நீதிபதி, முருகனுக்கு எதிராக பாகாயம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ஜல்லிக்கட்டுக்கென பிரமாண்டமான அரங்கம் அமைக்கத் திட்டம் - முதலமைச்சர் ஸ்டாலின்