சென்னை: செல்ஃபோன் வழிப்பறியில் ஈடுபட்ட ஒன்பது பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை சூளைமேடு அப்துல்லா தெருவைச் சேர்ந்தவர் ராகேஷ் நாயர். நுங்கம்பாக்கத்தில் தகவல் தொழிற்நுட்ப நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். ஜனவரி 10ஆம் தேதியன்று பணி முடித்து வந்துகொண்டிருந்த இவரை, ஆறு பேர் அடங்கிய கும்பல் அரிவளால் வெட்டிவிட்டு, அவரிடம் இருந்த செல்ஃபோனை பறித்துச் சென்றனர்.
ஓயோவில் 1000 பேரின் வேலை காலி!
கொள்ளையர்கள் வெட்டியதில் காயமடைந்த ராகேஷ் தலையில் ஒன்பது தையல்கள் போடப்பட்டன. இச்சம்பவம் தொடர்பாக நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது கொள்ளையர்களின் உருவம் சிக்கியது.
அவர்கள் திருட்டு வண்டியில் வந்து கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டதையும், தி.நகரிலும் இதே கும்பல் வழிப்பறியில் ஈடுபட்டதையும் காவல் துறையினர் கண்டுபிடித்தனர். இதனையடுத்து அவர்களைப் பிடிக்க தி.நகர் துணை ஆணையர் அசோக்குமார் தலைமையிலான தனிப்படை காவல் துறையினர், உதவி ஆய்வாளர் வெங்கடேசன் தலைமையில் கொள்ளையர்களை தேடினர்.
'பகைக்கு வயது ஒன்று' - மதுரையை மிரட்டும் கொலைவெறி போஸ்டர்
காவல் துறையினரின் தேடுதல் வேட்டையில் புளியந்தோப்பைச் சேர்ந்த ஒன்பது பேர் கொண்ட கும்பல் சிக்கினர். இந்த ஒன்பது பேரும் 16, 17 வயதே நிறைந்த சிறுவர்கள் என்பது அதிர்ச்சியளிக்கக்கூடிய தகவல். மேலும் இவர்கள் கும்பலாக நின்றபடி டிக்டாக் காணொலியில் நடித்து அதனை இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். அதுவே காவல் துறையினருக்கு இவர்களை பிடிக்க உதவியாக இருந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து கைதான சிறுவர்களில் ஒருவர் போதை மாத்திரைக்கு அடிமையானவர் என்பது விசாரணையில் தெரிந்தது. இவர்கள் மீது சென்னையில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவர்கள் போதை மாத்திரையை உட்கொண்டு திருட்டு இருசக்கரவாகனத்தில் வழிப்பறியில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.
இவர்கள் திருடிய பொருட்களை விற்று அதிலிருந்து கிடைக்கும் பணத்தைக் கொண்டு, ஏலகிரி மலைக்கு சென்று சொகுசாக இருந்துவிட்டு சென்னைக்கு திரும்பும்போது காவல் துறையினரிடம் சிக்கியுள்ளனர். கைதான ஒன்பது பேரும் நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்டு சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கப்பட்டனர்.