சென்னை: திருமங்கலம் ரவுண்டு பில்டிங் பகுதியைச் சேர்ந்தவர் புகழேந்தி. இவர் கடந்த ஒரு ஆண்டாக அம்பத்தூர் அத்திப்பட்டில் செயல்பட்டுவரும் தனியார் (swiggy instamart) நிறுவனத்தில் உதவி மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இதே நிறுவனத்தில் சென்னை நுங்கம்பாக்கத்தை சேர்ந்த ஹரிஷ் மற்றும் புளியந்தோப்பை சேர்ந்த ஏஜஸ் ஆகியோரும் பணிபுரிந்து வந்தனர். இவர்கள் நிறுவனத்திற்கு தெரியாமல் சேமிப்பு கிடங்கில் இருந்து சில பொருள்களை திருடியுள்ளனர்.
சிசிடிவி காட்சிகளை நிர்வாகம் ஆய்வு செய்து, இருவரையும் பணிநீக்கம் மற்றும் ஊதியம் பிடித்தம் செய்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து மேலாளரான புகழேந்தியை இருவரும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிடித்தம் செய்த ஊதியத்தை பெற்றுத் தருமாறு கேட்டுள்ளனர். இதற்கு புகழேந்தி தன்னால் ஒன்றும் செய்ய முடியாது, தாங்கள் நிறுவனத்தை தொடர்புக்கொண்டு கேளுங்கள் எனக் கூறியுள்ளார்.
இதனால் கோபமடைந்த ஏஜஸ், ஹரிஷ் ஆகியோர் மேலாளரை பழிவாங்கும் நோக்கத்தில் காத்திருந்தனர். நேற்று (ஏப்.28) வழக்கம்போல் இரவு பணிக்காக புகழேந்தி வந்ததை அறிந்து கொண்ட இருவரும் நிறுவனத்திற்குள் சென்று சரமாரியாக தாக்கியுள்ளனர். இவை அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. தாக்குதலில் காயமடைந்த புகழேந்தியை சக உழியர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
பின்னர் புகழேந்தி அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: Video: வெளிநாட்டவருடன் தகராறில் ஈடுபட்ட புதுச்சேரி பாஜக எம்எல்ஏ கல்யாண சுந்தரம்..!